ஒன்னு கட்சிய கலைச்சுடு… இல்லன்னா கூட்டணியில சேரு…லாட்டரி அதிபர் மகனை மிரட்டிய அமித்ஷா

 

புதுச்சேரி: குட்டி மாநிலமான புதுச்சேரியிலும் பாஜவால் நினைத்ததை சாதிக்க முடியாததால், புதுக்கட்சி துவங்கிய லாட்டரி அதிபர் மகனை டெல்லிக்கு அழைத்த அமித்ஷா, ‘‘ஒன்னு கட்சிய கலைச்சுடு.. இல்லன்னா கூட்டணியில சேரு…’’ என மிரட்டி உள்ளார். இதனால், பாஜ கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன், புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை திடீரென சந்தித்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூலி தொழிலாளியாக தொடங்கி இன்று சர்வதேச தொழிலதிபராக கோலோச்சுபவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். கோவையை சேர்ந்த இவர், இன்று பல்வேறு தொழில்களில் கால் பதித்து உள்ளார். லாட்டரி தொழில் மூலம் பல்வேறு மாநிலங்களில் பல ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததால், ஒன்றிய அரசின் ‘த்ரி ரோசஸ்’ (சிபிஐ, ஈடி, ஐடி) பிடியில் சிக்கி உள்ளார். மார்ட்டின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

இதனால் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பாஜ கொண்டு வந்த தேர்தல் பத்திரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய், தேர்தல் நிதியாக பல்வேறு கட்சிகளுக்கு மார்ட்டின் வழங்கி உள்ளார். தொழிலை பாதுகாக்கவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் மார்ட்டின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் சேர்ந்து உள்ளனர். மார்ட்டின் மனைவி ஐஜேகேவிலும், மருமகன் ஆதவ் அர்ஜூனா தவெகவிலும், மகனான ஜோஸ் சார்லஸ் மிஸ்ட் கால் மூலம் பாஜவிலும் உறுப்பினராக சேர்ந்தனர். மார்ட்டின் தொழிலை மட்டும் கவனித்து வந்தார்.

மார்ட்டின் மகன் சார்லஸ் தொழில் ரீதியாக பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்தபோது புதுச்சேரி மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. அங்கு அரசியல் செய்யும் ஆசையும் வந்தது. இதனால், திடீரென புதுச்சேரியில் அரசியல் பிரவேசம் எடுத்தார். இவருக்கு ரூட் போட்டு கொடுத்தது, பாஜ அமைச்சர் ஜான்குமார். ஜான்குமார் லாட்டரி தொழிலுக்கு குருநாதர் மார்ட்டின். இவர் மூலம் ஜான்குமார் லாட்டரி தொழிலை விரிவுப்படுத்தி நல்ல காசு பார்த்தார். பாஜ எம்எல்ஏவாக இருந்த ஜான்குமாருக்கு நீண்ட போராட்டத்துக்கு பின்புதான் அமைச்சர் பதவியே வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு இலாகா இன்னும் வழங்கவில்லை.

பாஜ மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்த ஜான்குமார், டெல்லிக்கு பாடம் கற்பிக்க மார்ட்டின் மகன் மூலம் ஸ்கெட்ச் போட்டார். மார்ட்டினிடம், ‘புதுச்சேரி அரசியலை எடுத்து சொல்லி இங்கு வந்தால், ஆட்சி அதிகாரத்துக்கு எளிதில் வந்துவிடலாம். முதலில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து கட்சி ஆரம்பிக்கலாம். அதற்குள் மாற்று கட்சிகளில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் மாஜிக்களை இழுத்துவிடலாம். இதை செய்தால் கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கலாம்’ என்று கற்பனையில் சி.எம் நாற்காலியை கண்முன் கொண்டு வந்து உள்ளார்.

அந்த மாயையில் மயங்கி மார்ட்டின் இந்த திட்டத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்து உள்ளார். தனது குருநாதருக்கு நன்றி கடனாக இருக்கும் எண்ணி, கடந்த 6 மாதத்துக்கு முன் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலுக்கு பாஜ அமைச்சர் ஜான்குமார் அறிமுகம் செய்து வைத்தார். ‘ஜேசிஎம்’ என்ற மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வந்த சார்லஸ், காமராஜர் நகர் தொகுதியில் பாஜ சார்பில் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியானது.

சார்லஸ் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தளபதியாக பாஜ அமைச்சர் ஜான்குமார் முன்னின்று நடத்தினார். சார்லஸ் ஆதரவை காட்ட சுயேட்சை எம்எல்ஏக்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, கிப்ட் பாக்ஸ் மற்றும் பல்வேறு ஆபர்கள் வழங்கப்பட்டது. இதனால், சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் சார்லஸ் பக்கம் சாய்ந்தனர்.

பாஜ ஆதரவுடன் இயக்கத்தை தொடங்கிய சார்லஸ் திடீரென, புதுச்சேரியில் ஆளும் பாஜ கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜ கூட்டணி அரசு, புதுச்சேரி வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்று விமர்சித்த சார்லஸ், போலி மருந்து விவகாரம், குடிநீரில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக சாடினார். திடீரென கடந்த ஒரு மாதத்துக்கு முன் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து, புதுச்சேரியில் முகாமிட தொடங்கிய சார்லஸ், புதுச்சேரி அரசுக்கு எதிராக அரசியல் செய்ய தொடங்கி போராட்டங்களை நடத்தினார். இதனால், மாற்றுக் கட்சியில் இருந்த பலர் எல்ஜேகே கட்சியில் இணைந்தனர். மேலும், பிரதான கட்சிகளில் வரும் தேர்தலில் சீட் கேட்டு காத்திருப்போர், சீட்டு தராவிட்டால் எல்ஜேகே கட்சியில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு தூது அனுப்பி இருந்தனர்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்ட சார்லஸ், 15 தொகுதிகளில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியில் இறங்கினார். குட்டி மாநிலத்தில் புதிதாக வந்த சார்லஸ் வருகை ஆளும் பாஜ- என்.ஆர் காங்கிரஸ் அரசுக்கு தண்ணி காட்டி வருவது அவர்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அரசு மீது தினமும் சார்லஸ் குற்றம்சாட்டியதால் முதல்வர் ரங்கசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

என்.ஆர்.காங்கிரஸை உடைத்து எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் வேலையை பாஜ அமைச்சர் ஜான்குமார் மூலம் சார்லஸ் செய்து வந்தார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, ‘‘உங்க அமைச்சர் ஜான்குமாரால் தான் இதெல்லாம் நடக்கிறது. இப்படியே போனால் வரும் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி கிடையாது. கூட்டணி வேண்டுமென்றால் சார்லஸ் கட்சியை வரும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் அல்லது ஆப்-லைனுக்கு செல்ல வைக்க வேண்டும்’’ என பாஜ தலைமைக்கு ஸ்ட்ரிக்ட்டாக தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லி அழைப்பை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது, இருவரிடமும் கடும் கோபமாக பேசிய அமித்ஷா, ‘உங்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

புதிதாக கட்சியை தொடங்கி புதுச்சேரியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். வரும் தேர்தலில் உங்க கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட வேண்டும். புதுச்சேரியில் மேலிடப் பொறுப்பாளர் மன்சுவிக் மாண்டவியா அல்லது சுரானாவிடம் பேசி, கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தியுங்கள். எல்ஜேகே கட்சிக்கு 2 அல்லது 3 சீட்டு ஒதுக்குகிறோம்.

இல்லை என்றால் கட்சியை கலைத்துவிட்டு செல்லுங்கள். இனிமேல், ஆளும் அரசை பற்றி விமர்சிக்க கூடாது. இதையும் மீறி செயல்பட்டால் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு தேர்தல் பணியே செய்ய முடியாமல் முடக்கிடுவோம்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. அமித்ஷா எச்சரிக்கைக்கு அடங்கி போன மார்ட்டின் மற்றும் சார்லஸ் அவர் போட்ட கண்டிஷனுக்கு சம்மதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, புதுச்சேரி திரும்பிய சார்லஸ் நேற்று முதன்முறையாக தனது ஆதரவு எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன் மற்றும் நிர்வாகிகளுடன் புதுச்சேரி சட்டசபைக்கு சென்று முதல்வர் ரங்கசாமியை திடீரென சந்தித்தார். அப்போது, ரங்கசாமிக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து, காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

பின்னர், ‘‘எல்ஜேகே சார்பில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொங்கல் விழா நடத்த அனுமதி தர வேண்டும். அந்த நிகழ்ச்சியில் நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும்’’ என்று சார்லஸ் கோரிக்கை வைத்தார்.

இதை கேட்ட ரங்கசாமி, பரிசீலிப்பதாக தெரிவித்தார். வழக்கம்போல் பல்வேறு மாநிலங்களில் குடைச்சல் கொடுக்கும் கட்சிகளை த்ரி ரோசஸ் மூலம் சரணடைய வைக்கும் தந்திரத்தை புதுச்சேரியிலும் அமித்ஷா தொடங்கி உள்ளது, மார்ட்டின் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால், புதுச்சேரியில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மிரட்டல் அரசியலால் புதுக்கட்சி மூடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Stories: