‘பலாப்பழம் எனக்குத்தான்’ மாஜி அமைச்சருடன் பெண் நிர்வாகி குஸ்தி: மாம்பழம் விட்டு தருமா?

 

பண்ருட்டி: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் பலாப்பழத்துக்கு பெயர்பெற்ற பண்ருட்டியும் ஒன்றாகும். விஐபி தொகுதியில் ஒன்றாக கருதப்படும் இத்தொகுதி, எம்ஜிஆருடன் அரசியல் பயணம் மேற்கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றிபெற்ற தொகுதியாகவும் உள்ளது. இத்தொகுதியிலிருந்து திமுக, அதிமுக மற்றும் பாமக ஆகிய 3 கட்சியினரும் 6 முறை தமிழக சட்டமன்றத்துக்கு தேர்வாகி அமைச்சராகவும் செயல்பட்டுள்ளனர்.

இத்தொகுதியில் 1996ம் ஆண்டு (திமுக) டாக்டர் ராமசாமி எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ல் பாமக தரப்பில் வேல்முருகன், 2006ல் மீண்டும் திமுக கூட்டணியில் வேல்முருகன், 2011ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து ஆகியோர் தேர்வாகினர். தொடர்ந்து, 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் சத்யா பன்னீர்செல்வம் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவில் இத்தொகுதியில் களமிறங்க சீட் கேட்டு முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்டோரும் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். சத்யா பன்னீர்செல்வம் 2021ல் எம்எல்ஏ சீட்டு கிடைக்காததால் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். மீண்டும் இலையில் களமிறங்க முடிவெடுத்து தற்போது கட்சி பணிகளில், மக்கள் சேவைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அதேவேளையில் பண்ருட்டியை முதன்முதலாக ருசிக்க மாஜி அமைச்சரான எம்.சி.சம்பத்தும் குறி வைத்துள்ளார். ஏற்கனவே அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த எம்.சி.சம்பத் கடலூர் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றிபெற்றிருந்தும் கடந்த 2021 தேர்தலில் தோல்வியடைந்தார். மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் என்ற அடையாளத்தோடு சம்பத் தனது சொந்த ஊரான கீழ்குமாரமங்கலம், பண்ருட்டி தொகுதியில் இடம் பிடித்துள்ளதால் தற்போது கடலூர், பண்ருட்டி என 2 சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட கட்சி மேலிடத்தில் விருப்ப மனு வழங்கியதாக அதிமுகவினர் கூறினர்.

தற்போது, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜவும், அன்புமணியின் பாமக அணியும் பண்ருட்டி தொகுதியில் களமிறங்க தங்களது கட்சித் தலைமை மூலமாக காய்நகர்த்தி வருகிறதாம். இதனால் தொகுதி பங்கீடு முடிவதற்கு முன்பே பலாப்பழம் தொகுதியை ருசிக்க இலை கூட்டணியில் மல்லுக்கட்டு தொடங்கி விட்டதாம். இருதரப்பின் செயல்பாடுகள் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கோஷ்டி பூசலை விசாலாமாக்கும் பட்சத்தில் பண்ருட்டி பலாவை சுவைக்க முடியாத நிலையும் உருவாகலாம் என்ற ஆதங்கத்தையும் கடைமட்ட தொண்டர்கள் வெளிப்படுத்தி வருகிறார்களாம்.

தமிழக அமைச்சரவையில் ஜெயலலிதா காலத்தில் உச்சத்தில் வலம்வந்த எம்.சி.சம்பத் ஏற்கனவே களமிறங்கிய கடலூர் தொகுதிக்கும் போட்டா போட்டிகள் நிலவுவதால் பண்ருட்டியில் களமிறங்கும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறினாலும் இலை மாஜிக்கு எந்த தொகுதி என்பதை கட்சித் தலைமையே இறுதி முடிவெடுத்து அறிவிக்கும் என்பதால் தற்போதைக்கு எந்த பதிலடி ரியாக்‌ஷனும் இல்லாமல் அமைதியாகவே வலம் வருகிறாராம்.

Related Stories: