மீண்டும் தேர்தலில் களத்தில் இறங்கிய மம்தா..! சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலில் காயத்துடன் சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பேரணியில் மம்தா பானர்ஜி பங்கேற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது. இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி கீழே விழுந்தார். 4 பேர் அவரை கீழே தள்ளி விட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும் அப்போது காவலர்கள் யாரும் அங்கு இல்லை எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபஜித் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

ஆனால் மம்தா பானர்ஜி அரசியல் நாடகம் நடத்துவதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதன்பின் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சாரத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளார் மம்தா பானர்ஜி. முழுமையாக குணமாகாத நிலையில் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இன்று பேரணியில் பங்கேற்றார். காந்தி மூர்த்தி பகுதியில் இருந்து ஹஜ்ரா நோக்கி நடைபெற்ற பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்து அவர் சென்றார்.

Related Stories: