லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை

* ஒன்றிய அரசு முதல் முறையாக ஒப்புதல், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

புதுடெல்லி: இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, லஞ்சம் வாங்கிக் கொண்டு விடைத்தாளில் திருத்தம் செய்தது, கருணை மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டது, 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது என்று அடுத்தடுத்து முறைகேடுகள் அம்பலமானது. இது பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய போது முறைகேடு நடக்கவில்லை என்று ஒன்றிய அரசு கூறி வந்தது. இந்த நிலையில், முதல் முறையாக நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக் கொண்டுள்ளார்.

தவறு செய்த அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, குறிப்பிட்ட சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவரை இல்லா வகையில் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்தது முறைகேடு புகார்களுக்கு வலு சேர்த்தது.

பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். வினாத்தாளை முன்கூட்டியே பெற ரூ. 30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மாணவர்கள் கொடுத்ததை பாட்னா காவல்துறை அம்பலப்படுத்தியது. இதேபோல் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள பள்ளியில் நீட் தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வெழுதிய 27 மாணவர்களிடம் பதில் எழுதி தருவதாக கூறி ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூ.10 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.2.30 கோடிக்கான காசோலை கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்த ரகசிய தகவலையறிந்த கோத்ரா மாவட்ட ஆட்சியர் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது முறைகேடு புகார் உண்மை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நீட் தேர்வு மைய பள்ளி முதல்வர் ஆசிரியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை மட்டும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து வாபஸ் பெறுவதாக நீதிபதிகளிடம் ஒன்றிய அரசு தெரிவித்தது. இதன்படி, மொத்ம் 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சம் எம்பிபிஎஸ் சீட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டும் 24 லட்சம் மாணவர்கள் மருத்துவ கனவோடு நீட் தேர்வை எழுதினர்.

அவர்களது மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வில் அடுத்தடுத்து முறைகேடுகள் ஆதாரங்களுடன் அம்பலமானது நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், நீட் முறைகேடுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசோ நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று ஒன்றை வரியில் எல்லா புகாரையும் மறுத்து வந்தது.

நீட் தேர்வு மோசடி விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு அடிப்படையில் விசாரணை நடத்தி லட்சக்கணக்கான இளம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலம் மோடி அரசின் நீட் ஊழலை மூடி மறைக்கத் தொடங்கியுள்ளார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வினை மத்திய அரசு இன்னமும் தாங்கிப்பிடிப்பது வெட்கக்கேடான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்று ஒன்றிய அரசு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மைதான். குறிப்பாக இரண்டு இடங்களில் சில முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒன்றிய அரசு இதை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய தேர்வு முகமையின்(என்.டி.ஏ) பெரிய அதிகாரிகள் குற்றவாளிகள் என தெரியவந்தாலும் அவர்கள் தப்ப முடியாது.

யாரையும் தப்ப விடமாட்டோம். அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். தேசிய தேர்வு முகமையின் செயல்பாட்டில் மாற்றம் தேவை” இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இந்த நிலையில், ஒன்றிய அரசே முதல் முறையாக நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. அத்துடன் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

* இந்த ஆண்டு நீட் தேர்வை 24 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

* வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது.

* 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர்.

* 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

The post லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை appeared first on Dinakaran.

Related Stories: