அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி ஆலோசனை: சென்னையில் நடைபெறுகிறது

சென்னை: அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் 20ம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் 2022ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, கட்சியை வழிநடத்தி வருகிறார். மீண்டும் அதிமுக கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தினார். ஆனாலும் அனைத்திலும் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இது எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஒருசில மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், பலரும் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் அதிமுக தொண்டர்களும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இனி அதிமுக எந்த தேர்தலில் வெற்றிபெறாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் போட்டியிட்ட 9 தேர்தல்களில் அதிமுக படுதோல்வியையே சந்தித்து வருகிறது.

தற்போது ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக போட்டியிட்டால் தோல்வி அடைந்துவிடுவோம் என்று, ஏதேதோ காரணம் காட்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த சனிக்கிழமை அறிவித்தார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிக்கும் என்று அறிவித்துள்ளதை, அரசியல் விமர்சகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுள்ள தலைவர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி மற்றும் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ‘அதிமுக ஒருங்கிணைப்பு குழு’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாங்கள், உங்களை சந்தித்து பேச நேரம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இதற்கு எந்த தலைவரும் சரியான பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில் சசிகலாவை நேற்று அதிமுக தொண்டர்கள் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது பேசிய சசிகலா, ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் தற்போது ஒன்றிணைய வேண்டும்’ என்று கூறினார். அதேநேரம், ‘இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்று அதிமுக அறிவித்தது இந்த நேரத்தில் சரி இல்லாதது’ என்றும் கூறியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வருகிற 20ம் தேதி சென்னையில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சசிகலா, நேற்று அறிவித்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனாலும், அதிமுக கட்சியை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் தீவிர ஆதரவாளர்களும் கட்சியின் மூத்த தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி ஆலோசனை: சென்னையில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: