கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

டெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ளன. கடந்த ஆண்டு ஒடிசாவின் பலாசூர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தின் டார்ஜலிங் மாவட்டத்தில் சரக்கு ரயில் பயணிகள் ரயில் மீது மோதி 15 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப காலமாக அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நடப்பதற்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் ரயில்வே துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சகத்தை மோடி அரசு சுயவிளம்பரத்திற்கான துறையாக மாற்றிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். பாதுகாப்பு விஷயத்தில் ரயில்வே துறை அலட்சியமாக இருப்பதையே இந்த விபத்து உணர்த்துவதாக காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி பிரமோத் திவாரி குற்றம்சாட்டியுள்ளார். முந்தைய காலத்தில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர்கள் பதவி விலகி இருப்பதை சுட்டிகாட்டிய அவர் தார்மீக அடிப்படையில் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் நாட்டில் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு appeared first on Dinakaran.

Related Stories: