அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை, தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி வடக்கு கேரள பகுதிவரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழகத்தில் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும்.

நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் 12 செ.மீ, சிவகிரி, ஆண்டிபட்டியில் தலா 9 செ.மீ, குன்னுர், பிளவக்கல்லில் தலா 8 செ.மீ, தேவகோட்டையில் 7 செ.மீ, திருச்சி, நாவலூர் கோட்டைப்பட்டில் தலா 6 செ.மீ, ஆயக்குடியில் 5 செ.மீ, ஆழியாரில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று வடகேரளா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: