உள்கட்சி பூசலை மறைக்கும் வகையில் திருப்போரூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்குவதா? அதிமுகவினர் கடும் அதிருப்தி

சென்னை. திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினருக்கு  கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்போரூர் தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கோதண்டபாணி தகுதியிழப்பு செய்யப்பட்டார். தொடர்ந்து, 2019ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த செந்தில் என்கிற இதயவர்மன் வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தேர்தலில் சீட் கேட்டு முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். தண்டரை மனோகரன் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர். அதன் அடிப்படையில் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கேட்டிருந்தார். அதிமுக மாவட்ட செயலாளரான திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் கடந்த 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த செந்திலிடம் தோற்றவர். இதனால் தனக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டிருந்தார்.

எனவே, தனது மனைவியுடன் சென்று  முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இருவரில் ஒருவருக்கு சீட் கொடுத்தாலும் மற்றொரு கோஷ்டியினர் வேலை செய்ய மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டதால் அ.தி.மு.க. தலைமை திருப்போரூர் தொகுதியை கூட்டணிக் கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கி விட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இரு கோஷ்டியினரும் நேற்று ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று தலைமைக் கழகத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்று திருப்போரூர் தொகுதியை அ.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என்றும், வேறு தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்கவும் அவர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர். இதனால் திருப்போரூர் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டாலும் அ.தி.மு.க.வினர் முழு மனதுடன் வேலை செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: