அமைச்சரை எதிர்த்ததால் சீட் தர மறுப்பதா? மக்களை சந்தித்த பின் அதிரடி முடிவு : சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் சீற்றம்

சாத்தூர்: அமைச்சரை எதிர்த்ததால் எனக்கு சீட் வழங்கவில்லை. மக்களை சந்தித்தப் பின் எனது முடிவை அறிவிப்பேன் என சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். கடந்த 2016 தேர்தலில் இத்தொகுதியில் வென்ற எதிர்கோட்டை சுப்ரமணியன், ‘‘எதிர் முகாமுக்கு’’ (டிடிவி அணி) சென்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக வலம் வந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏவானார். ஆனால், அதற்கு பிறகு அமைச்சருக்கும், இவருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவியது. அமைச்சர் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதற்கிடையே, நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார்.

இதுகுறித்து எம்எல்ஏ ராஜவர்மன் கூறியதாவது: மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றி வருகிறேன். சாத்தூர் தொகுதியின் உண்மையான நிலவரத்தை முதல்வர், துணை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 8 மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் இல்லாமல் இருந்தது. இப்போது 2 மாவட்டமாக பிரித்து கட்சி விட்டு, கட்சி மாறியவரை அமைச்சர் அழைத்து அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சரின் கைகூலிக்குதான் பதவி என்றாகி விட்டது. அதிமுக இயக்கத்திற்காக  பாலாஜியா அல்லது பாலாஜிக்கு இயக்கமா என்று தெரியவில்லை. அவரை எதிர்த்ததால் தான் எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. என்னை கொலை செய்து விடுவதாக பல  மிரட்டல்கள் விடுத்தவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. வேட்பாளர் பட்டியலில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு இல்லை. ராஜபாளையம் தொகுதியில் கட்சி தொண்டர்கள் இருக்கிறார்கள். இவர் அந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது. சாத்தூர் வேட்பாளர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்காக நான் முதல்வர், துணை முதல்வரை சந்திக்க உள்ளேன். அதன்பின் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்த பின் எனது அதிரடி முடிவை தெரிவிப்பேன் என்றார்.

அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல்

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டையில் ராஜவர்மன் ஆதரவாளரான விஜயகரிசல்குளம் கிளைச்செயலாளர் கார்த்திக் தலைமையில் நேற்று இரவு 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திடீரென திரண்டனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்தும், சாத்தூர் அதிமுக வேட்பாளரை தோற்கடிப்போம் என்றும் கோஷமிட்டனர். அப்போது ராஜேந்திரபாலாஜி ஆதரவாளரான வெம்பக்கோட்டை கிளைச்செயலாளர் முத்துராஜ் தலைமையில் திரண்ட அதிமுகவினர் எதிர் கோஷமிட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

Related Stories: