காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

காரைக்குடி: மாசி-பங்குனி திருவிழாவை முன்னிட்டு, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ளது ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில். மாசி மற்றும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, இந்த கோயிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. முன்னதாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு, பக்தர்கள் வரிசையில் நின்று காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழா முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 16ல் பக்தர்கள் முளைப்பாரி மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 17ல் பக்தர்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் சங்கங்கள் சார்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டு வருகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: