பெட்ரோல், டீசல், விலை உயர்வு கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி முதல் நாளில் முடங்கியது நாடாளுமன்றம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் 2ம் கட் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் முற்றிலும் முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் முதல்கட்ட கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் கடந்த 12ம் தேதி மாநிலங்களவையும், 13ம் தேதி மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் அமர்வின் 2ம் கட்ட கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 9 மணிக்கு மாநிலங்களவை கூடியது.

முதல் நாளிலேயே பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எதிர்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் அளித்தார். எனினும் அவை தலைவர் வெங்கய்ய நாயுடு அனுமதி வழங்க மறுத்தார். இதனால், எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். கடும் அமளி காரணமாக அவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

11 மணிக்கு அவை தொடங்கியபோதும், அமளி தொடர்ந்ததால், அவை ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாலை 4 மணிக்கு மக்களவை கூடிய போது, பெட்ரோல், டீசல், எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை குறைக்கக் கோரி விவாதம் நடத்துமாறு திமுக மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாலை 7 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

* இன்று முதல் வழக்கமான நேரம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலங்களவை காலை 9 மணி முதல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 10 வரையிலும் என இரண்டு ஷிப்ட்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் மாநிலங்களவை காலை 11 மணி முதல் 6 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மக்களவையும் வழக்கமான நேரத்திற்கு நடக்கும் என கூறப்பட்டுள்ளது. 11 மணி முதல் 6 மணி வரை அவை செயல்படும்’’ என்றார்.

* முன்கூட்டியே முடிகிறது

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முடிகின்றது. இந்நிலையில் 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் முன்கூட்டியே முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* ஆண்கள் தினம் கேட்ட பாஜ பெண் எம்பி

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நேற்று பெண் எம்பிக்கள் பலரும் மாநிலங்களவையில் உரையாற்றினர். அப்போது, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். சிவசேனா உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான மசோதா கொண்டுவரப்பட்டு 24 ஆண்டுகள் ஆவதாகத் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் பவுசியா கானும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தினார். அப்போது பாஜ எம்பி சோனல் மன்சிங், ‘‘சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் இன்று சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாட வேண்டும்” என்றார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆண்கள் தினம் கோரிய எம்பியால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், சமத்துவம் பற்றி பேசுவதாக கூறி அவர் சமாளித்தார்.

Related Stories: