சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்தால் ஆண்டுக்கு ஏழை குடும்பங்களின் ரூ.50 ஆயிரம் கோடி மிச்சமாகிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘மத்திய அரசின் பல்வேறு சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்தகங்கள் மூலமாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் ரூ.50 ஆயிரம் கோடி பணம் மிச்சப்படுத்தப்படுகிறது’ என பிரதமர் மோடி கூறினார். மக்களுக்கு மலிவு விலையில் மருந்து வழங்குவதற்காக ‘ஜன அவ்ஷாதி’ (வெகுஜன மருந்து) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014ல் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 84 இடங்களில் அமைக்கப்பட்ட இந்த மலிவு விலை மருந்தகங்களின் எண்ணிக்கை தற்போது 7,500 ஆக அதிகரித்துள்ளது.

மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் 7,500வது ஜன அவ்ஷாதி கடையை வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இன்று 7,500வது ஜன அவ்ஷாதி மையம் ஷில்லாங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பொது சுகாதார மையங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும் எந்தளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை என்பதை அறியலாம். 6 ஆண்டுக்கு முன் 100 மையங்கள் கூட இல்லாத நிலையில் இன்று 7,500வது மையத்தை திறந்துள்ளோம். விரைவில் நாம் 10 ஆயிரம் மைய இலக்கை எட்ட வேண்டும்.

இதுபோன்ற மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு சுகாதார திட்டங்கள் மற்றும் மலிவு விலை மருந்தகங்களால் ஆண்டுதோறும் ஏழைக் குடும்பங்களின் ரூ.50 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்படுகிறது. மேலும், ஆயிரம் ஜன அவ்ஷாதி  மையங்களை பெண்களே ஏற்று நடத்துகின்றனர். இந்த மையங்களில் மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதோடு ஆயுஷ் மருந்துகளையும் பெற்று மக்கள் பயன் அடைகின்றனர். மேலும், இந்த மையங்கள் மூலமாக 11 கோடி சானிடரி நாப்கினும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: