காங்கிரஸ் நேர்காணல் முடிந்த பின்னர் திமுகவுடன் பேச்சுவார்த்தை: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: காங்கிரசில் நேர்காணல் முடிந்த பின்னர் திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் கடந்த 25ம் தேதி முதல் நேற்று வரை சத்தியமூர்த்தி பவனில் வாங்கப்பட்டது. ஏராளமான காங்கிரசார் போட்டிப் போட்டு விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.

மொத்தம் 4700 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6, 7ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல் நடந்தது. 5 குழுக்களாக பிரித்து நேர்காணல் நடத்தப்பட்டது. ஒரு குழுவில் 6 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று நேர்காணலை நடத்தினர். நேர்காணலில் தொகுதி நிலவரம், கட்சியின் வளர்ச்சி பணிகள், வெற்றி வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், ”காங்கிரசில் இன்றும் (நேற்று), நாளையும் (இன்றும்) நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் முடிந்த பின்னர் பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளோம். திமுகவுடன் எந்த வருத்தமும் இல்லை. கண் இருந்தால் கண்ணீர் வரும். கண் இல்லாதவர்களுக்கு கண்ணீர் வராது. தொகுதி பங்கீட்டில் காலம் தாமதம் என்பதே இல்லை. இப்போதுதான் நேர்காணலே நடக்கிறது” என்றார்.

Related Stories:

>