கூட்டணியில் இருந்து விலகல் அதிமுக அரசுக்கு எதிராக 84 தொகுதிகளில் பிரசாரம்: கருணாஸ் பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணில் இருந்து விலகுவதாகவும், 84 தொகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய இருப்பதாகவும் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்தார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்காமல் பாஜ அரசு கடைசி வரை எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. முக்குலத்தோர் சமூகத்தை அதிமுக அரசு ஏமாற்றி விட்டது. சமூக நீதியில் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற சமூகங்களை புறந்தள்ளி தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக அவசர கோலத்தில் இடஒதுக்கீடு வழங்கி உள்ளார்.

அதிமுகவை குறிப்பிட்ட இரு சமூகத்திற்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி மாற்றி விட்டார். எனவே, அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகுகிறேன். எங்கள் சமுதாயம் பெரும்பான்மையாக உள்ள 84 தொகுதிகளில் நானே களத்தில் இறங்கி அதிமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்வேன். இளைஞர்களை திரட்டி அதிமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்வோம். முக்குலத்தோர் சமூகத்திற்கு அதிமுக அரசு செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம். எங்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை நிரூபித்து காட்டுவோம். அதிமுகவில் 1.50 கோடி தொண்டர்களில் 75 லட்சம் பேர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நான் அரசியல்வாதி இல்லை, சமுதாயவாதி தான். அதிமுகவில் எந்த தொகுதியும் நான் கேட்கவில்லை. சசிகலாவுக்கு என் வாழ்நாள் முழுவதும் ஆதரவாளராக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: