பவானி நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து -பொதுமக்கள் அவதி

பவானி : பவானி நகராட்சி குப்பைக்கிடங்கு புதிய பஸ் நிலையம் அருகே உள்ளது. சேகரிக்கப்பட்ட குப்பைகள் இயந்திரத்தின் மூலம் பிரித்து, முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மீண்டும் இதே பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

இக்குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் இதிலிருந்து கிளம்பும் கரும்புகை அருகாமையில் உள்ள பஸ் நிலையம், குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்கிறது.

 மேலும், காற்றடிக்கும் திசையெங்கும் செல்வதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று குப்பையில் தீப்பிடித்து, கரும்புகை அப்பகுதியைச் சூழ்ந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் நகராட்சி அதிகாரிகள் சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து குப்பையில் பிடித்த தீயை அணைத்தனர்.

பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். குப்பைக் கிடங்கில் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: