கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்

* சிறந்ததை அனுப்புபவர் ஒருநாள் கமிஷனராகலாம்

* பொதுமக்களுக்கு நொய்டா போலீசார் அழைப்பு

புதுடெல்லி:  நொய்டாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாவட்ட காவல்துறை உறுதியாக உள்ளது. இதற்காக, நகரத்தில் வசிக்கும்  பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை அனுப்ப நொய்டா காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. வரும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம்  கொண்டாடப்படுவதையொட்டி நொய்டா காவல்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்ஒருபகுதியாக, பெண்கள் மேம்பாடு மற்றும்  பாதுகாப்பு குறித்து சிறந்த முன்மொழிவு செய்வோரை தேர்வு செய்து அவருக்கு ஒருநாள் நொய்டா துணை கமிஷனராக பணியாற்றும் வாய்ப்பை  வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பு பெண்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் துணை கமிஷனர் விருந்தா சுக்லா தெரிவித்தார்.

இதுபற்றி விருந்தா சுக்லா மேலும் கூறுகையில், ‘‘சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். இதற்காக பெண்களின் மேம்பாடு  மற்றும் பாதுகாப்பு குறித்த சிறந்த முதல் மூன்று முன்மொழிவுகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு முறையே ₹5,000, ₹3,000 மற்றும் ₹2,000  பரிசுகள் வழங்கப்படும். இதுமட்டுமின்றி சிறந்த பரிந்துரை அனுப்பிவருக்கு ஒருநாள் நொய்டா துணை கமிஷனராக நியமித்து பணியாற்ற வாய்ப்பு  வழங்கப்படும். இது பெண்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்படும்’என்றார்.

மேலும், பெண்கள் மட்டுமின்றி கவுதம் புத்தா நகர் மாவட்டத்தை சேர்ந்த யார் வேண்டுமானாலும் முன்மொழிவுகளை அனுப்பலாம். அவை சிறந்தவை  தேர்வு செய்து நகரில் அமல்படுத்தப்படும். பரிந்துரைகளை அனுப்ப விரும்புவோர்  மார்ச் 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பரிந்துரைகளை  அனுப்புவோர் தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>