தமாகாவும் 12ம்.... தமாகா துணை தலைவர் கோவை தங்கம்: நச்சுனு 4 கேள்வி

* தமாகாவுக்கு 12 சீட் ஒதுக்க கோரி கேட்டிருக்கிறீர்கள், அத்தனை பிரபல வேட்பாளர்கள் இருக்கிறார்களா?

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமாகாவில் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். மூப்பனாரால் உருவாக்கப்பட்டவர்கள் தமாகாவில் அதிகம் பேர் இருக்கிறார்கள். முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என ஏராளமான பேர் காங்கிரசை காட்டிலும் தமாகாவில் அதிக அளவில் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

* பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், 12 நிமிடங்கள் கூட உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லையே ஏன்?

அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் எங்களை அன்பாக நல்ல முறையில் உபசரித்தார்கள். ஜி.கே.வாசனின் வழிகாட்டுதல் பேரில் சைக்கிள் சின்னம் கிடைக்க 12 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் நாங்கள் முன்வைத்தோம். அதற்கு மேல் ஜி.கே.வாசன், அதிமுக தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். எனவே நீங்கள் சைக்கிள் சின்னம் கிடைக்க 12 தொகுதிகளை ஒதுக்கி தந்தால் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளை முன்வைத்தோம். அதற்குமேல் கூட்டணியை பற்றிய பேச்சுவார்த்தை எல்லாம் ஜி.கே.வாசனை சேரும். அவரை தொடர்பு கொண்டு பேசிக்கொள்ள நாங்கள் கூறினோம். நாங்கள் முடிவுக்கு வர முடியாது. அதுபோல, அமைச்சர்களும் முடிவுக்கு வர முடியாது. இருதரப்பும் அவரவர் தலைமையைத்தான் கேட்க முடியும். எனவே 12 நிமிடத்துக்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

* நீங்கள் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையின்போது அடுத்த 12 மணி நேரத்துக்குள் சொல்லி அனுப்புவதாக கூறியிருக்கிறார்களே... அது உண்மையா?

அடுத்த 12 மணி நேரத்துக்குள் பதில் சொல்வதாக அவர்கள் சொல்லவில்லை. முதல்வரிமுடம், துணை முதல்வரிடமும் பேசி விட்டு, ஜி.கே.வாசனை தொடர்பு கொள்கிறோம் என்றுதான் கூறினார்கள். மேற்கொண்டு நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டார்கள். எதுவாக இருந்தாலும் ஜி.கே.வாசனை தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டோம்.

* அதிமுக 12 சீட் ஒதுக்கும்பட்சத்தில் தேர்தல் செலவுக்கு என்ன செய்வீர்கள்?

தமாகாவுக்கு 12 சீட் கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் செலவு செய்யும் அளவுக்கு திறமையும், சக்தியும் வாய்ந்த சகோதரர்கள் தமாகாவில் இருக்கிறார்கள். ஜி.கே.வாசன் வழிகாட்டுதலின் பேரிலும், அதிமுக உதவியோடும் 12 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சைக்கிள் சின்னத்தையும் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.

Related Stories:

>