உபி, அரியானாவில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் வந்தது; முதல்வர் எடப்பாடி படத்துடன் 70,000 ஸ்கூல் பேக்குகள் பறிமுதல்: ஈரோடு, ராமநாதபுரத்தில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை

காங்கயம்: வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அ.தி.மு.க.வினர் சொகுசு காரில் கொண்டு சென்ற பரிசுப்பொருட்களையும், 70 ஆயிரம் ஸ்கூல் பேக்குகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூரில், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் குணசேகரன் எம்.எல்.ஏ. படம் பொறிக்கப்பட்ட 15 பைகள் இருந்தன.  ஒவ்வொரு பையிலும் ஒரு புடவை, போர்வை, ஒரு எவர்சில்வர் தட்டு ஆகியன இருந்தது தெரிய வந்தது.

அவை பறிமுதல் செய்யப்பட்டன. 70 ஆயிரம் ஸ்கூல் பேக்குகள்: அரியானா மாநிலத்தில் இருந்து 13 ஆயிரம் ஸ்கூல் பேக்குகள் ஒரு லாரியில் ஈரோடு மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பேக்குகளை பங்களாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த பேக்குகளில் முதலமைச்சர் மற்றும் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டு தமிழக பள்ளி கல்வித்துறை என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த தி.மு.க.வினர் இதனை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற பறக்கும் படையினர் ஸ்கூல் பேக்குகளை பிரித்து சோதனை செய்தனர்.

பின்னர் ஸ்கூல் பேக்குகளை தனி அறையில் வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதவிர, உபியில் இருந்து ராமநாதபுரத்திற்கு கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட, முதல்வர் எடப்பாடி உருவப்படம் அச்சிடப்பட்ட 57 ஆயிரம் ஸ்கூல் பேக்குகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதிமுகவினர் கொடுத்த 4,500 கோழிக்குஞ்சு பறிமுதல்

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே உள்ள பழங்குடியினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் கரன்சி, சோலாடமட்டம், கோடமலை உள்ளிட்ட மலை கிராமங்களில் ஒரு வீட்டிற்கு 25 நாட்டு கோழிக்குஞ்சுகள் வீதம் அ.தி.மு.க.வினர் வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தி, 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: