மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலை உயர்வு: எம்எல்ஏ சீனிவாசகவுடா குற்றச்சாட்டு

கோலார்: மத்தியில் ஆளும் பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கோலார் தொகுதி எம்எல்ஏவுமான சீனிவாசகவுடா தெரிவித்தார்.

கோலார் தாலுகா, கொடாரி கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ``கர்நாடக மாநில அரசின் கஜனா முற்றிலும் காலியாகியுள்ளது. எந்த வளர்ச்சி திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். மானியங்களும் வழங்கவில்லை. ஆனால் அமைச்சர்கள் நிதியில்லை என்றாலும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

 மாநிலத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் உரம், விதைகள், பூச்சிகொல்லி மருந்துகள் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே பயிர் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வு மேலும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஏழைகள், விவசாயிகளை பல வழிகளில் வஞ்சித்து வருகிறது. மக்கள் படும் கஷ்டத்தை ரசித்து கொண்டுள்ளார்கள். மத்திய அரசு தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றி வருகிறது. அரசாங்கம் நிர்வகித்து நடத்த வேண்டிய பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதன் மூலம் மீண்டும் நாட்டை காலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் லிட்டர் 100யை எட்டியுள்ளது. சமையல் காஸ் விலை 825யை தாண்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது’’ என்றார்.

Related Stories: