மார்ச் 8ல் சட்டசபை கூடுகிறது டெல்லி பட்ஜெட் மார்ச் 9ல் தாக்கல்: கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை முடிவு

புதுடெல்லி: டெல்லி சட்டசபை மார்ச் 8ம் தேதி கூடுகிறது. மார்ச் 9ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் சிசோடியா தாக்கல் செய்ய உள்ளார். கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி அமைச்சரவை கூட்டம் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டெல்லி சட்டசபையை மார்ச் 8ல் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடராக அமையும் இந்த கூட்டத்தில் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

துணை முதல்வர் சிசோடியா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 7வதுமுறையாக சிசோடியா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக மார்ச்8ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் அனில் பைஜால் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. மார்ச் 16ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. இந்த முடிவுக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கெஜ்ரிவால் அரசு தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆம்ஆத்மி அரசின் முக்கிய கொள்கையான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் மின்வாகன கொள்கையை உலக அளவில் முன்மாதிரியாக கொண்டு செல்ல தேவையான நடவடிக்கையை ஆம்ஆத்மி அரசு மேற்கொண்டுள்ளது. எனவே அதற்கு தேவையான சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் வகையில் அங்கு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலனியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேரமும் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக மாநில வருவாய் கடுமையாக சரிந்துள்ள நிலையில் எந்தமாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது அனைவர் மனதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கலாச்சார வளாகத்திற்கு ரூ.50 கோடி நிதிஒதுக்கீடு

டெல்லியில் கலாச்சார வளாகம் அமைக்கப்படும் என்று 2020ம் ஆண்டு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா துணை முதல்வர் சிசோடியா தலைமையில் நடந்தது. இந்தநிலையில் நேற்று முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் கலாச்சார வளாகம் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கில் டெல்லி காப்பக கட்டிடத்தின் கட்டமைப்பு வடிவமைப்பை வலுப்படுத்த ரூ.1.32 கோடி அனுமதி வழங்கியுள்ளது.

* 2020-21ம் ஆண்டு டெல்லி பட்ஜெட் ரூ.65 ஆயிரம் கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

* கொரோனா தொடங்கிய நேரம் என்பதால் பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

* கொரோனா காரணமாக டெல்லி வருவாய் 42 சதவீதம் குறைந்துள்ளது.

Related Stories:

>