போராட்டத்தில் பங்கேற்க வந்த போது போலீசார் தடுத்ததால் விமான நிலையத்தில் சந்திரபாபு திடீர் தர்ணா: ரேணிகுண்டாவில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர், ஜில்லா மற்றும் மண்டல பரிஷத் தேர்தல்கள் நடந்து முடிந்தது. நகராட்சி, மாநகராட்சி  தேர்தல் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பல இடங்களில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சி வேட்பாளர்களை  மிரட்டி  போட்டியின்றி தேர்வு   செய்வதாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவித்து சித்தூரில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி  போராட்டத்திற்கு  அழைப்பு விடுத்தது. இப்போராட்டத்திற்கு கொரோனா மற்றும் தேர்தல்  காரணமாக போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க தெலுங்குதேசம் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்  விமான நிலையத்திலிருந்து திருப்பதி அடுத்த ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நேற்று வந்தார். அவரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி,  மீண்டும் ஐதராபாத் செல்லும்படி கூறினர். இதையடுத்து, சந்திரபாபு விமான நிலையத்தின் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டார். இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சியினர்  ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வந்தனர்.

சுமார் 8 மணி நேரம், இரவு 7.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு பின்னர் விமானம் மூலம் ஐதராபாத் திரும்பினார். இது தொடர்பாக  தேர்தல் ஆணையத்திடம் புகார் தர இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதற்கிடையே சித்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின்  முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை போலீசார் வீட்டுக் காவலில் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>