புதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு

நாகை: புதுச்சேரியில் பாஜ தலைமையில் ஆட்சி அமையும் என காரைக்காலில் நடந்த பிரசார பொது பாஜ க்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். புதுச்சேரி பாஜ சார்பில் காரைக்கால் சந்தை திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: வரும் தேர்தலில் பாஜ தலைமையில் புதுச்சேரியில் புதிய ஆட்சி மலரும். இதுதான் உண்மை. 2015 தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அப்போது  இந்தியாவின் சின்ன மாநிலமான புதுச்சேரியை இந்தியாவே திரும்பி பார்க்கும்  வகையில் செய்வேன் என்றார். இதற்காக புதுச்சேரி மாநிலம் மேம்பாடு அடைய  பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஒரு வாய்ப்பு  பாஜவிற்கு கொடுத்து பாருங்கள். புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த மாநிலமாக  மாற்றி காட்டுகிறோம்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை யாரும் கவிழ்க்கவில்லை. அது தானாக கழிந்துவிட்டது. காங்கிரசில்  இருந்த தலைவர்கள் முன்னணி நிர்வாகிகள் எல்லோரும் பாஜகவில் இணைந்து  வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதை யோசிக்க வேண்டும். புதுச்சேரியில் படித்த 75 சதவீத இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இங்கு பாஜ ஆட்சி வந்தவுடன் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். பறக்கும் பாதை திட்டம், புதுச்சேரி மாநில சுற்றுலாவை முன்னேற்ற மிகப்பெரிய திட்டம் அமைக்கப்படும். பிரதமரின் நேரடிபார்வையில் இந்த திட்டம் அமைக்கப்படும். பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்கள் நிறைந்து உள்ளனர்.

 ராகுல் காந்தி மீனவர்களுக்கு தனிதுறை உருவாக்க வேண்டும் என்று  பேசியுள்ளார் 2019லேயே தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 50  லட்சம் பேர் பயன்பெற புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இந்த திட்டங்களின் பலன்கள் புதுச்சேரிக்கு அதிகம் கிடைக்க நான்  பொறுப்பேற்கிறேன். புதுச்சேரியை உன்னதமான மாநிலமாக மாற்றி காட்டுவேன் என்று மோடி கூறியுள்ளார். புதுச்சேரியில் கல்வி அறிவு அதிகம். இங்குள்ள இளைஞர்கள் திறமை உள்ளவர்கள். புதுச்சேரி இளைஞர்களே ஒருமுறை ஆட்சியை மாற்றி காட்டுங்கள். உங்களுடைய கல்வி வேலை வாய்ப்பு வாழ்வியலை பாரதிய ஜனதா கட்சி மாற்றி காட்டும். மோடியின் கரத்தை வழுப்படுத்த வேண்டும். தாமரை சின்னத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்ட அமித்ஷா

விழா முடிவில் பேசிய அமித்ஷா, உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உலகின் உன்னதமான தமிழ்மொழியில் பேச முடியவில்லை. தமிழ் மொழியில் பேசி இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். பிரதமர் ஆன பிறகும் மோடி தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். நானும் ஆசைப்படுகிறேன் என்றார்.

Related Stories:

>