பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது:  ஒரு பெண்ணின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது. காவல்துறை பெண் உயர் அதிகாரிக்கே  பாலியல் தொல்லை கொடுக்கும் நிலையென்றால் மற்ற பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகும் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றம் எஸ்.பி கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்  போராட்டம் தொடரும். திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும். தமிழகம் வெற்றி நடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தாயகம் கவி எம்எல்ஏ, மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>