சட்டப்பேரவையில் தொகுதிக்கென குரல் கொடுக்காமல் கை தட்டும் பணியை மட்டுமே சிறப்பாக செய்த எம்எல்ஏ: கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி உள்ளது. குளத்தூர் தொகுதியாக இருந்து 2011ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு கந்தவர்வகோட்டை தனி தொகுதியாக உருவானது. இந்த தொகுதியில் கடந்த 2 தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. கந்தர்வகோட்டை தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த நார்த்தாமலை ஆறுமுகம் உள்ளார். 2016 தேர்தலின் போது இவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த அன்பரசன் போட்டியிட்டார்.

ஆளுங்கட்சி எம்எல்ஏவாக உள்ள ஆறுமுகம், 5 வருடமாக தொகுதிக்கென எந்தவித வளர்ச்சி பணிகள், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த எம்எல்ஏ, மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் அவரது நலனில் மட்டுமே அதிக அக்கறை காட்டி வருகிறார். கந்தர்வகோட்டை பேருந்து நிலைய விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. புதிய பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படவில்லை. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்வதில்லை. கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள பல குக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதி செய்து தருவது அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இதனால் மாணவர்கள் நகர் புறங்களுக்கு வந்து செல்வதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.  

இத்தொகுதியில் உள்ள குன்னாண்டார்கோவில் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. ஏரி, குளங்களில் உள்ள வரத்து வாரிகள் தூர்வார எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. குன்னாண்டார்கோவில் ஒன்றியத்தில் ஒரு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல கிராமங்களில் பேருந்து நிறுத்தம் கூட கட்டித்தராதது வேடிக்கையாக உள்ளது.  

கீரனூர் பேரூராட்சியில் நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை. கீரனூரில் உள்ள 15 வார்டுகளில் உள்ள சாலைகள் செப்பனிடப்படவில்லை. கழிவுநீர் கால்வாய்கள் சரி செய்யப்படாததால் எங்கும் துர்நாற்றம் வீசுகிறது.

கந்தர்வகோட்டை பகுதியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சவ்வரிசி தயாரிப்பு தொழிற்சாலை, முந்திரி தொழிற்சாலைக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாதவராக இருந்து வருகிறார் சிட்டிங் எம்எல்ஏ ஆறுமுகம். தொகுதிக்கென அடிப்படை வசதிகள், மக்களுக்கென திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் வாக்குறுதி கொடுத்து வாக்குகளை பெற்ற எம்எல்ஏ ஆறுமுகம், 5 வருடத்தில் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த ஒரு முறை கூட சட்டமன்றத்தில் குரல் ஒலிக்காமல் கைத்தட்டும் பணியை மட்டுமே சிறப்பாக செய்து முடித்துள்ளார் என்பது தான் தொகுதி மக்களின் குற்றச்சாட்டு.

* என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து திட்டங்களும் செய்துகொடுத்துள்ளேன்

எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் கூறும்போது, 5 வருடங்களில் பல திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறேன். பேருந்து நிறுத்தம், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்து தந்துள்ளேன். பல குக்கிராமங்களில் சிறிய வகை மினி டேங்குகள் அமைத்து கொடுத்துள்ளேன். பல குக்கிராமங்களில் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள் செய்து கொடுத்துள்ளேன். பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். தேர்தல் வாக்குறுதிப்படி கந்தர்வகோட்டை தொகுதிக்கு என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து திட்டங்களையும் செய்துகொடுத்துள்ளேன் என்றார்.

* கொள்ளை அடிப்பதை மட்டுமே முழுநேர பணியாக கொண்டு இருந்தார்

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் கூறும்போது, சிட்டிங் எம்எல்ஏ ஆறுமுகம், கொள்ளை அடிப்பதை மட்டுமே  முழு நேர பணியாக கொண்டு இருந்தார். மகன் பெயரில் அனைத்து பணிகளையும்  மேற்கொண்டார். கமிஷன் எடுத்து எந்த பணியும் தரமாக செய்யவில்லை. தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவில் எந்தவித பெரிய திட்டங்களையும் செய்யவில்லை. மேல்நிலைநீர் தேக்க தொட்டிகள் கட்டி தரவேண்டும் என்று 5 வருடமாக எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதனை பரிசீலனை செய்யவும் இல்லை. 5 ஆண்டுகளாக தொகுதியின் வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆளும் கட்சியின் அரசியல் விளையாட்டுகளில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் என்றார்.

Related Stories: