வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரம்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 93 சமூகத்தினர் கடும் எதிர்ப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வழங்குவதா எனக்கேள்வி : நீதிமன்றத்தில் முறையிடவும் முடிவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 93 சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வழங்குவதா எனவும்  கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அனைத்து தரப்பு மக்களும் உரிய விகிதாசார வாய்ப்பினை பெறும் நோக்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வகுப்பினருக்கு என மொத்தம் 69 சதவீதம் இட  ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிரிவினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த பட்டியலின் கீழ் 109 சாதிகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் 20  சதவீத இட ஒதுக்கீட்டில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயன் பெற்று வந்தனர்.

இந்த நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியும், 93 சாதியினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சியுள்ள  பிரிவினருக்கு 2.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியும் சட்டப்பேரவையில் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள், சாதி வாரி கணக்கெடுப்பு  நடத்தாமல் குறிப்பிட்ட சமூகத்துக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பது சட்ட விரோதமானது என்றும் கூறுகின்றனர். மேலும், இந்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது: வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எந்தவிதமான எதிர்ப்பும் கிடையாது. ஆனால், அது கொடுக்கப்பட்டிருக்கிற விதம், கொடுக்கப்பட்டிருக்கின்ற நேரம் மக்கள் மத்தியில் சரியான பார்வையில் செல்லவில்லை. தேர்தல்  ஆணையர் தேதியை அறிவிக்க ஆரம்பிக்கும்போது தான் இவர் மசோதாவை நிறைவேற்றி முடித்தார்.

அந்த கடைசி நேரத்தில் அதை செய்ததது ஒரு நிர்பந்தத்தின் பேரில் செய்தது போலத் தான் தோன்றுகிறது. அரசாங்கம், மற்ற  சமுதாயத்தையும் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். வன்னியர் சமுதாயத்தினர் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருபவர்கள் மற்ற சமுதாயத்தினரை ஏன் சந்திக்கவில்லை? அரசியல் ரீதியாக வலிமை  பெற்றவர்கள் என்று சொன்னால், தேர்தலில் அவர்கள் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக சந்திப்பதும், மற்ற சமுதாயத்தை சந்திக்காமல் முடிவெடுத்து இருப்பதும் மற்ற சமுதாயத்தினர் மத்தியில் ஒருவித எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.  இந்த விஷயங்களை எல்லாம் சரி செய்து இருக்க வேண்டும். பாமக போராட்டம் செய்தபோது, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையத்தை நியமித்தார்கள். அப்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி முதல்வர் எடப்பாடியை சந்தித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆணையத்தின் கருத்துக்களை  கேட்காமல், காத்திருக்காமல் திடீரென அறிவித்து இருப்பது ஒரு சரியான ஜனநாயக முறையாக தெரியவில்லை.

அனைத்து சாதியினருமே அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது  எல்லோருடைய நிலைப்பாடு. சாதி வாரி கணக்கெடுக்க ஆணையத்தை அமைத்த போது, எல்லோருமே வரவேற்றோம். அது சரியாக நடைபெறாமல் இன்றைக்கு திடீரென்று தேர்தலுக்காக, தேர்தலில் ஒப்பந்தம் போடுவதற்காக இந்த  நிலைப்பாட்டை எடுத்தது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை. தேர்தலை பொறுத்தவரையில் பாதிக்கப்படுகிற மற்ற சமுதாயத்தினர் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வன்னியர்களை பொறுத்தவரை  அவர்கள் இது ஒரு தற்காலிக நடவடிக்கை தான் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி அவசர, அவசரமாக தேர்தலுக்காக தற்காலிக ஏற்பாட்டை செய்திருப்பதை, அவர்களது தரப்பினரும் விரும்புவதாக தெரியவில்லை. எதை எப்படி  பார்த்தாலும் பொறுமையாக அலசி ஆராய்ந்து பார்த்து முடிவுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் ஒதுக்கீடு பங்கீட்டு இருக்க வேண்டும். எம்பிசி மற்றும் டிஎன்டி பட்டியலில் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு. இது கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதம் மக்களுக்கு இந்த 20 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  1931க்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியிடம் மனு கொடுத்தோம். இது  தொடர்பாக நாங்கள் போராட்டம் கூட நடத்தினோம். இந்த சூழலில் பாமக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக அதிமுக இவ்வளவு தூரம் சரண்டர் ஆகி விட்டனர். உண்மையில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. முறைப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் பிரிக்கவே கூடாது.  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதை அனுமதித்ததாக முதல்வர் எடப்பாடி கூறுகிறார்.

அதனால் நிச்சயம் தென்மாவட்டம் குறிப்பாக திருச்சியில் இருந்து அதிமுகவுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் அதிகமாகும். இந்த மசோதாவுக்கு எதிராக  உயர்நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளோம். அதிமுக அரசு இந்த மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகி விட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு தரக்கூடாது. ஒபிசி ஆணையம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிதியுதவி வழங்கியும் தமிழக அரசு எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு ஒவ்வொரு பட்ஜெட்டில் டிஎன்டி பிரிவுக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால், தமிழக அரசு டிஎன்டி பிரிவில் உள்ள 68 சாதிகளின் வளர்ச்சிக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இந்த அரசு டிஎன்டி  மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் தலைவர் சேம.நாராயணன் கூறியதாவது: அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்து விட்டு தேர்தல் தேதி அறிவிப்புக்கு 1 மணி நேரத்திற்கு முன்பு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை 10.5, 7, 2.5 சதவீதம் என்று உள்ஒதுக்கீடுக்கான  சட்டத்தை அவசர அவசரமாக அரசியல் காரணங்களுக்காக பல்வேறு ஓட்டைகளை வைத்து நிறைவேற்றியுள்ளனர். தமிழக முதல்வர் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் என்ற அடிப்படையில் மக்கள் தொகை  எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் சமூக அநீதியை ஏற்படுத்தியுள்ளார். கலைஞர் 2009ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கும் போது அனைத்து அரசியல் கட்சிதலைவர்களின் கருத்துக்களையும், அச்சமூக மக்களின் கருத்துக்களையும் கேட்டு தான் எந்த பிரச்னையும்  யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் சட்டமாக்கினார். அச்சமூக மக்களும் உள்ஒதுக்கீடு பயனை அனுபவித்து வருகின்றனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு இப்பொழுது சமூக அநீதி ஏற்பட்டுள்ளது. கலைஞர் வழியில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு  ஏற்ப மு.க.ஸ்டாலின் முதல்வரான உடன் சமூக நீதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்குவார் என்பது  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தமிழக முதலமைச்சர் போலியான உள்ஒதுக்கீட்டை அறிவித்து, சகோதர சமூகத்தினரிடையே உள் மோதலை உருவாக்கியுள்ளார் என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.

Related Stories: