டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாதுகாப்பு திடீர் குறைப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. டெல்லி முதல்வராக கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அவருக்கு முதல்வருக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் மீது அடுத்தடுத்து மூன்று முறை தாக்குதல் நடந்துள்ளது. மேலும் அவரது வீட்டுக்கு குண்டு மிரட்டல்களும் வந்துள்ளன. அவரது மகளை கடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசாரும் அவருக்கான பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகள் குறைக்கப்பட்டதாக நேற்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு தற்போது 6 போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். நேற்று அந்த எண்ணிக்கை 2ஆக குறைக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆம்ஆத்மி தலைவர்கள் கூறுகையில்,’ குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியில் 27 வார்டுகளில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றது பா.ஜவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ேதர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்துள்ளனர். கெஜ்ரிவால் இன்று குஜராத் சென்று ஆம்ஆத்மிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று தெரிவித்தனர்.

ஆம்ஆத்மியின் இந்த குற்றச்சாட்டு மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கையையும் குறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

பா.ஜவுக்கு சவால் அளிக்கும் ஒரே கட்சி ஆம்ஆத்மிதான்

டெல்லி மாநகராட்சிகளில் காலியாக உள்ள 5 வார்டுகளில் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கெஜ்ரிவால் நேற்று இரண்டாம் நாளாக பிரசாரம் மேற்கொண்டார். சீலாம்பூரில் அவர் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு சவால் அளிக்கும் வகையில் செயல்படும் ஒரே கட்சி ஆம்ஆத்மி மட்டும் தான். காங்கிரஸ் தற்போது பூஜ்ஜியமாகி விட்டது. எனவே அதற்கு வாக்களிப்பது பயனற்றது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>