தேர்தல் கழுதைகளுக்கு ‘ராஜ’ மரியாதை

மலைக்கிராம வாக்குச்சாவடிகளில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும். அதில் ஒன்றுதான் கழுதை மேட்டர். தேனி மாவட்டம் குரங்கணி உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல பாதைகளே இல்லை. ஆகையால் கழுதை மீது ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து கொண்டு செல்வது வழக்கம். இது தெரிஞ்ச விஷயம்தானேன்னு சொல்றீங்களா? மேட்டர் அதுவல்ல... வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல, நினைச்ச கழுதையை கொண்டு போக முடியாதாம்... அதில் மிக முக்கியமா, கழுதைகளை வளர்க்கக் கூடியவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாதாம்.

மலைப்பகுதிகளுக்கு செல்லும் கழுதைகளுக்கு, முதல் நாளில் இருந்து ஓட்டுப்பதிவு முடியும்வரை சிறப்பான, தரமான உணவு கொடுத்து கவனிக்க வேண்டுமாம். வளர்ப்பவரும் அங்கேயே இருப்பார். வாக்குப்பதிவு முடிந்து மீண்டும் இயந்திரங்கள் கீழே இறங்கும் வரை கழுதையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதிலும் கூடுதல் அக்கறை காட்டப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த வழியே கழுதை சுமந்து செல்ல வேண்டும். அந்த பாதை குறித்த பாதுகாப்பு விபரங்களை சர்வேயர்களை கொண்டு ரூட் மேப் தயாரிக்கப்படும். எலெக்சன்னா எத்தனை டென்ஷன் பார்த்தீங்களா?

* உள்நாட்டு மீனவர்களின் உள்ளக்குமுறல்

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மீனவர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். தடை கால நிவாரண தொகை வழங்குவதில் முறைகேடு, படகுகளுக்கான மானிய மண்ணெண்ணெய் முறைகேடு என பல்வேறு வகைகளில் ஏமாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் உள் நாட்டு மீனவர்களுக்கு அதிமுக ஆட்சியில் பேரிடி விழுந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சுமார் 1.30 லட்சம் உள் நாட்டு மீனவர்கள் உள்ளனர். ஆனால், பல ஆண்டுகளாக கணக்கெடுப்பு நடத்தாமல், வெறும் 50 ஆயிரம் பேர் தான் உள் நாட்டு மீனவர்கள் என அரசு தரப்பில் கூறி உள்ளனர்.

உள்நாட்டு மீனவர்களுக்கு என கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை அந்தந்த பகுதியில் உள்ள உள் நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் மட்டும் இதை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். சம்பந்தமே இல்லாமல் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக, பண பலம் படைத்தவர்கள் மீன் பிடித்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிறார்கள். மீன்பிடி உரிமம் இருந்த போது இதில் கிடைக்கும் லாப தொகை, உள் நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு கிடைத்தன. ஆனால், இப்போது அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் தான் அதிக லாபம் பார்த்து வருகிறார்கள் என உள் நாட்டு மீனவர்கள் குமுறுகிறார்கள்.

Related Stories:

>