தமிழகத்திலும் கொரோனா இரண்டாம் அலை பரவலா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

அவனியாபுரம்: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆர்டிபிசிஆர் சோதனை என்ற மிகப்பெரிய வியூகத்தால் தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரிப்பை கவனித்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக, மிக குறைவு என மருத்துவக்குழுவினர் கூறுகின்றனர்.

பிற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழக மக்கள் முகக்கசவம் அணிவது, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தடுப்பு மருந்து எடுத்து கொண்ட முன்கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. அவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே முன்பதிவு செய்து கொண்டு தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் எடுத்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்து கொடுக்கப்படும். அதற்கான மருந்துகள் தமிழக அரசிடம் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>