திமுகவில் விருப்ப மனு வினியோகம் சூடுபிடித்தது துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட முன்னணியினர் விருப்ப மனு தாக்கல்: ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டி போட்டு விண்ணப்பம்

சென்னை: தமிழகம்,  புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 17ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு வழங்க தொடங்கிய முதல் நாளில் சுமார் 1117 பேர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். அது மட்டுமல்லாமல் சென்னை கொளத்தூர்  தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிட வேண்டும் என்று  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். 8வது நாளான நேற்று, விருப்ப மனு வாங்கவும், அதனை தாக்கல் செய்யவும் திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் திரண்டனர். இதனால் நேற்று அண்ணா அறிவாலயம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவரது மகன் கதிர் ஆனந்த் உடன் இருந்தார். அதே போல் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதிக்கும், அவரது மகன் அருண் நேரு லால்குடி தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்  அருப்புகோட்டை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் குறிச்சிப்பாடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழி, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம், மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி, திமுக இலக்கிய அணி இணைசெயலாளர் வி.பி.கலைராஜன் தி.நகர், சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

அதே போல் வடசென்னை வக்கீல் அணி மாவட்ட செயலாளர் மருதுகணேஷ் ஆர்.கே.நகர் தொகுதிக்கும், கவிஞர் சல்மா மணப்பாறை தொகுதிக்கும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.  8 நாட்களில் விருப்பம் மனுக்களை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி உள்ளனர். விருப்ப மனுக்களை வழங்க வரும் 28ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: