கர்நாடகாவில் மீண்டும் ஒரு பயங்கரம் வெடிபொருட்கள் வெடித்து கல் குவாரியில் 6 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், சிக்கப்பள்ளாபுரா மாவட்டம், குடிபண்டே தாலுகாவில் உள்ளது ஹிரேநாகவள்ளி கிராமம். இங்கு, ‘ஸ்ரீசாய் ஏஜென்சிஸ்’ என்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கல்குவாரியில் வெடி வைப்பதற்காக, குடிபண்டேவில் இருந்து வாகனம் மூலம் ஜெலட்டின் குச்சிகளை ஊழியர்கள் ஏற்றி சென்றனர். கல்குவாரி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சி வெடித்து சிதறியது. இதில், அந்த வாகனத்தில் வந்த 6 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

பொதுமக்கள், காயமடைந்த லாரி டிரைவர் உள்பட 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இந்த கல்குவாரி பாஜ.முக்கிய பிரமுகரான நாகராஜ் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. அவர் சட்ட விரோதமாக கல்குவாரியை நடத்தி வருவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதற்கு முன்பாக, ஷிவமொக்காவில் கடந்த மாதம் 22ம் தேதி இதே போன்று கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்ததனர்.

Related Stories: