கொரோனா பீதியால் கேரள - கர்நாடக எல்லைகள் மூடல்: பிரதமருக்கு பினராய் விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கேரள எல்லைகளை கர்நாடக அரசு மூடியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிம் எழுதியுள்ளார். கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நோய் பாதித்த மாநிலங்களில் கேரளா 2வது இடத்தில் உள்ளது. இதையடுத்து கேரளாவில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கேரள - கர்நாடக எல்லையில் உள்ள 13 சாலைகளை கர்நாடகா மூடிவிட்டது. மேலும் கேரளாவில் இருந்து கர்நாடகா செல்பவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் பரிசோதித்த பின்னரே கர்நாடகாவுக்குள் அனுமதித்து வருகின்றனர். அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களின் ஊழியர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என கர்நாடக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கொரோனா ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபோது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக கேரள எல்லையை கர்நாடக அரசு மூடியுள்ளது.

மேலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கர்நாடக கட்டுப்பாடு விதித்துள்ளதால் கேரளாவில் இருந்து செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவ சேவைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். அத்தியவசிய பொருட்கள் கொண்டுசெல்லும் வாகனங்களை கூட தடுக்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் இதுதொடர்பாக கர்நாடக அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினர். இதற்கிடையே காசர்கோடு எல்லையில் தலப்பாடி சோதனை சாவடியில் நேற்று கர்நாடக அதிகாரிகள் நிபந்தனைகளை தளர்த்தியுள்ளனர். இது வழியாக செல்பவர்களுக்கு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை.

Related Stories: