மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் செய்கிறது மம்தா அரசு

சுசூரா:  ‘மாநிலத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசு ஊழல் செய்கிறது’ என மேற்கு வங்கத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற  உள்ள அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பல்வேறு திட்டப்பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேற்கு வங்க மாநிலம் சுசூராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு  பேசியதாவது: வாக்குவங்கியை பாதுகாப்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி திருப்திபடுத்தும் அரசை நடத்துகின்றார். மாநில அரசின் ஊழல் கலாச்சாரம் காரணமாக நீங்கள் லஞ்சப்பணத்தை கொடுக்காமல், ஊழல் கூட்டமைப்பின் அனுமதியை  பெறாமல், வாடகைக்கு கூட ஒரு வீட்டை எடுப்பது கடினமாகும். முதல்வர் மம்தா அரசானது, விவசாயிகள் மற்றும் ஏழைகள் பயன்பெறும் வகையில் மாநில அரசின் திட்டங்களான பிரதமர் கிசான் சம்மன் நிதி மற்றும் ஆயுஷ்மான் பாரத்  உள்ளிட்ட திட்டங்களை அனுமதிப்பது கிடையாது.

தொழிற்துறை வளர்ச்சியை மாநிலம் புறக்கணிக்கின்றது. மேற்கு வங்க மக்கள் உண்மையான மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளனர். பாஜ ஆட்சிக்கு வந்தால் திருப்தி அரசியல் செய்யாமல் அனைத்து துறைகளிலும்  வளர்ச்சியை உறுதி செய்யும். ஊழல் கலாச்சாரம் இருக்கும் வரை மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்பது இயலாத ஒன்றாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பிரதமர் மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பெட்ரோலிய துறையில்  ரூ.3,222 கோடி மதிப்புள்ள 3 முக்கிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து அசாமை ஆட்சி செய்தவர்கள் மாநிலத்தை புறக்கணித்து வந்தனர். அவர்கள் டெல்லியில் இருந்து  அசாம் வெகுதூரத்தில் இருப்பதாக நம்பினார்கள். ஆனால் இப்போது டெல்லி வெகுதூரத்தில் இல்லை. அது உங்கள் வாசல்படியில் உள்ளது’’ என்றார்.

மார்ச் 7ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு?

அசாம் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ‘‘கடைசியாக 2016 ல் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மார்ச் 4ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு மார்ச் 7ம் தேதிக்குள்  தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்  என்பது எனது அனுமானம். தேதிகளை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி’’ என்றார். இதனால் மார்ச் 7ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ உற்பத்தி மேம்படுத்தப்படும்

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான ஆன்லைன் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘சுதந்திரத்துக்கு முன்பு நாம் நூற்றுக்கணக்கான பீரங்கி  தொழிற்சாலைகளை வைத்திருந்தோம். இரண்டு உலகப்போரின்போதும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் சுதந்திரத்துக்கு பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த முறையான இருக்கவேண்டிய  அளவுக்கு வலுப்படுத்தப்படவில்லை.

இது போன்ற சூழ்நிலையால் நாம் சிறிய ஆயுதங்களுக்கு பிற நாடுகளை நாட வேண்டியநிலை ஏற்பட்டது. இந்திய ராணுவ தளவாட இறக்குமதியில் மிகப்பெரிய நாடாக உள்ளது. இது பெருமைப்படவேண்டிய விஷயமில்லை. இந்த சூழலை  மாற்றுவதற்காக இந்தியா கடினமாக பணியாற்றி வருகின்றது. அதன் திறனை விரைவாக மேம்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு, அந்நிய முதலீட்டு தாராளமயமாக்கல் போன்ற முயற்சிகளுடன் பாதுகாப்பு துறை  உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.

Related Stories: