குப்பையில் தீ வைப்பதால் புகைமண்டலமாய் காட்சி தரும் திருவில்லி.தேசிய நெடுஞ்சாலை-விபத்து ஏற்படும் அபாயம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் சிலர் குப்பைகளை அடிக்கடி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அதிலிருந்து ஏற்படும் புகையினால் வாகன விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

திருவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையை வழியே மதுரையிலிருந்து ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லவும் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இரவு, பகல் நேரம் முழுவதும் சிறிய மற்றும் பெரிய அளவிலான வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்த வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை தேக்கிவைத்து எரிப்பதால் அதில் ஏற்படும் புகை சாலையை மறித்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மறைப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புகை எழுந்துள்ள பகுதியில் வாகனங்கள் வரும் போது முகப்பு விளக்கை எரிய விட்டுக் கொண்டு செல்லும் நிலையும் உள்ளது. எனவே, சாலையோரம் குப்பையில் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: