கொளத்தூர் ஒன்றியத்தில் மர்ம நோய் தாக்குதலால் 50 ஆடுகள் உயிரிழப்பு-ஏரியில் உடலை வீசுவதால் அபாயம்

மேட்டூர் : கொளத்தூர் ஒன்றிய பகுதியில், மர்ம நோய் தாக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. கால்நடை மருத்துவர்கள் தடுப்பூசி போட்டும் பலனளிக்காததால், இறந்த ஆடுகளை சிலர் ஏரியில் வீசிச் செல்வதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர் ஒன்றியத்தில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனர். விவசாயம் கைகொடுக்காத வறட்சி காலங்களில், விவசாயிகளுக்கு கைகொடுப்பது கால்நடை வளர்ப்பு மட்டுமே. வனப்பகுதியை ஒட்டிய காவிரி கரையில் கொளத்தூர் ஒன்றியம் அமைந்திருப்பதால், ஆடுகளை அதிக அளவில் இப்பகுதி மக்கள் வளர்த்து வருகின்றனர்.

இங்கு மேச்சேரி இன செம்மறி ஆடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆடுகளை நோய் தாக்கி வருகிறது. வாயில் புண் ஏற்பட்டு தீவனம் உண்ணாமல் இருந்தும் வயிற்று போக்கு ஏற்பட்டு ஆடுகள் இறந்து வருகின்றன. தார்காடு பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் நோய்வாய்பட்டு இறந்துள்ளன. மேலும் ஏராளமான ஆடுகள் நோய்வாய்பட்டு உள்ளன.

கால்நடை மருத்துவர்கள் தடுப்பூசி போட்ட போதிலும், ஆடுகளை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. தினந்தோறும் ஆடுகளும், ஆட்டு குட்டிகளும் பலியாகி வருவதால் பெரும்பாலான விவசாயிகள், தங்களின் ஆடுகளை கிடைக்கும் விலைக்கு விற்று விட்டு ஆடு வளர்ப்பை கைவிட்டு வருகின்றனர். மேட்டூர் அருகே பொட்டனேரியில் ஆடு ஆராய்ச்சி நிலையம் இருந்த போதிலும், ஆடுகளை தாக்கும் நோயை கண்டறிந்து, உரிய தடுப்பு மருந்து வழங்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. நேற்று ஒரே நாளில் 5க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன.

கடந்த 2 மாதங்களாக இப்பிரச்னை இருந்தாலும், கால்நடை மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவும், ஆராய்ச்சி நிலைய அக்கறை இன்மையாலும் இறைச்சிக்கு பெயர்போன மேச்சேரி இன செம்மறி ஆடுகள் அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.

மேலும், நோய் தாக்கி இறந்த ஆடுகளை, சிலர் தார்காடு ஏரியில் வீசிச்செல்கின்றனர். இந்த தண்ணீரை ஆடுகளும், வனவிலங்குகளும் பருகிச்செல்கின்றன. இதனால் கால்நடைகள் மற்றும் வனவிலங்களுக்கு மர்மநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மீன்கள் விற்பனைக்கும் செல்வதால், மீன்கள் மூலம் மனிதர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மர்மநோயை கட்டுப்படுத்தி, பரவாமல் தடுக்க கால்நடைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: