பாங்காங் பகுதி போல பிற எல்லையிலும் படைகள் வாபஸ் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை: இந்திய-சீன ராணுவம் முடிவு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் பாங்காங் திசோ ஏரிப் பகுதியைப் போல பிற எல்லையிலும் படைகள் வாபஸ் பெறுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதென இந்திய-சீன ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே கடந்த மே மாதம் தொடங்கி எல்லை பிரச்னை நீடித்து வருகின்றது. கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவியது, கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டதால் பாங்காங் திசோ பகுதியில் இருந்து இந்திய, சீன வீரர்கள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்ட கட்டமைப்புகள், முகாம் முழுமையாக காலி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பத்தாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. சீனாவுக்கு சொந்தமான மோல்டோ எல்லையில் காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.

இது நேற்று அதிகாலை 2 மணி வரை 16 மணி நேரம் நீடித்தது. இப்பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் பிற எல்லைப் பகுதிகளான ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் தேப்சாங் பகுதிகளில் படைகளை வாபஸ் பெறுவது குறித்து பேசப்பட்டது. இந்த விஷயத்தில் மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என இரு நாட்டு உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பாங்காங் திசோ பகுதியை காட்டிலும் மற்ற எல்லைகளில் படைகள் வாபஸ் பெறுவது அவ்வளவு சிக்கலான காரியமாக இருக்கிறது என ராணுவ தகவல்கள் கூறுகின்றன. எனவே விரைவில் இதில் இரு நாட்டு ராணுவம் இடையே சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: