வாயலூர், நல்லாத்தூர் கிராமங்களில் மாத கணக்கில் திறக்காமல் உள்ள ரேஷன் கடைகள்: அத்தியாவசிய பொருட்களில் குவிந்துள்ள புழு, வண்டுகள்

திருக்கழுக்குன்றம்: வாயலூர், நல்லாத்தூர் கிராமங்களில், மாத கணக்கில் ரேஷன் கடைகள் திறக்காததால், அத்தியாவசிய பொருட்களில் வண்டு, புழுக்கள் நிறைந்துவிடுகின்றன. இதனால், அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.திருக்கழுக்குன்றம் தாலுகா வாயலூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு சுமார் 1000 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதேபோல், நல்லாத்தூரில் உள்ள ரேஷன் கடைக்கு சுமார் 400 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, பொதுமக்கள்  வாங்கி பயன்படுத்துகின்றனர். கடந்த பல மாதங்களாக  இந்த 2   கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளை சரிவர திறப்பதில்லை. குறிப்பாக மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே கடையை திறப்பதால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், அதிக பணம் கொடுத்து வெளிமார்க்ெகட்டில் பொருட்கள் வாங்கி, குடும்பம் நடத்த முடியாமல் கடும் அவதியடைவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, கடையை முறையாக திறக்காமல் உள்ளதால், அங்குள்ள உணவு பொருட்களில் புழு, வண்டுகள் நிறைந்துவிடுகின்றன. இதனை வாங்கி சென்றாலும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளை, மாதத்தில்  ஓரிரு நாட்கள் மட்டுமே  திறக்கின்றனர். இதனல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் புழுப்பிடித்து, வண்டுகள் அதிகரித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், நாங்கள் அந்த ரேஷன் பொருட்களை வாங்காமல் அவதிப்படுகிறோம். மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே கடைகளை திறப்பது குறித்தும், எங்களின் அவதி பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே,  சம்பந்தப்பட்ட கடைகளை முறையாக தொடர்ச்சியாக திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுபற்றி ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘ஒவ்வொரு விற்பனையாளரும் 5 முதல் 7 கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யவேண்டும். இதனால், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட கடைகளுக்கு  நாங்கள் செல்ல முடியாத பணிச்சுமையில் உள்ளோம்’ என்றார். எனவே, விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ள ரேஷன் கடைகளுக்கு உடனடியாக ஊழியர்களை நியமித்து, மக்களின் சிரமத்தை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: