முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு: மதகுகளை இயக்கிப் பார்த்து திருப்தி

கூடலூர்: பெரியாறு அணையில் தமிழக பிரதிநிதி இல்லாமல் கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு செய்தது. பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, கடந்த 2014ல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இக்குழு தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மைப் பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை அரசு முதன்மைச்செயலர் மணிவாசகன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வளத்துறை செயலர் டி.கே.ஜோஸ் ஆகியோர் உள்ளனர்.  கடந்தாண்டு ஜன. 28ல் பெரியாறு அணையில்  கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது. ஓராண்டுக்கு பிறகு கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர். இதில், தமிழக பிரதிநிதி மணிவாசகன் கலந்து கொள்ளவில்லை. காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியம், முதன்மை பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்குழுவினர் பெரியாறு அணையில் மெயின் அணை, பேபி டேம், அணையின் கசிவுநீர் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். பின், தேக்கடி படகுத்துறையில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை கண்ணகி படகில் அணைக்கு புறப்பட்டுச் சென்றார். கேரள பிரதிநிதி டி.கே.ஜோஸ் கேரள அதிகாரிகளுடன் கேரள வனத்துறை படகில் சென்றார். இதையடுத்து மாலையில் இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

Related Stories: