நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் புதிய சட்டம் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது : உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பு வாதம்

டெல்லி : நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் 2015ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து மேற்கண்ட சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த தமிழக அரசு 2019ம் ஆண்டு நில ஊர்ஜித புதிய சட்டம் என குறிப்பிட்டு மீண்டும் நிலம் கையகப்படுத்துதலை மேற்கொள்ள முன்வந்தது. இதனை எதிர்த்து சென்னை திருவள்ளூரை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயிகளை அப்புறப்படுத்தவோ அல்லது நிலங்களில் நுழையவோக் கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் குமணன் வாதத்தில், நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் ஏற்புடையது இல்லை. முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானவையாகும். அவர்களாது வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்யும். அதனால் இதுதொடர்பாக தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் தமிழக அரசு தரப்பில் தங்களது வாதங்களை முன்வைக்கலாம் என தெரிவித்தனர். அதுவரை விவசாய நிலங்களில் நுழையக் கூடாது என முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: