நெல்லைக்கு துண்டு போடும் நயினார்

நெல்லை தொகுதியில் இலை கட்சி சார்பில் மூன்று முறை களம் கண்டவர்  நயினார் நாகேந்திரன். 2016 தேர்தலில் மீண்டும் இலை கட்சியில் போட்டியிட  நயினாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு முறை எம்எல்ஏ ஆகும் வாய்ப்பு  கிடைத்த தொகுதியில் இம்முறை வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது. தேர்தலில் தோற்றதால் கட்சிப் பணிகளில்  அதிகம் தலைகாட்டாமல் நயினார் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின்  மரணத்திற்கு பிறகு இனி அதிமுக தேறாது என முடிவு செய்த நயினார் டெல்லி  சென்று பாஜவில் ஐக்கியமானார். இலை கட்சியில் இருந்து தேசிய கட்சிக்கு  தாவினாலும் பொதுக்கூட்டங்களில் அதிரடியாக பேசினார். கட்சியில் சேர்ந்த  உடனேயே மாநில துணைத் தலைவர் பதவி கிடைத்த நிலையில் கடந்த மக்களவை தேர்தலில்  முதன் முறையாக ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கினார். அங்கும் எடுபடவில்லை.  

தேசிய கட்சியில் இருந்தாலும் நமக்கு மாநில அரசியல் தான் சரி என முடிவுக்கு  வந்துள்ள நயினார் மீண்டும் தனது பழைய நெல்லை தொகுதி மீது கண் வைத்துள்ளார். அதை மனதில் வைத்து தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில்  நடந்த சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் பாஜ வெற்றி  பெறும் முதல் தொகுதி நெல்லை தொகுதியாக தான் இருக்கும் என பேசி தொகுதிக்கு  தான் ரெடி என்பதை கட்சிக்கு தெரிவிக்கும் வகையில் ‘துண்டு’ போட்டு  வைத்துள்ளார்.

Related Stories: