விருப்ப மனு வருகிற 24ம் தேதி முதல் விநியோகம் எதிரொலி: அதிமுக சார்பில் போட்டியிட கோடிக்கணக்கில் பேரம்

* கட்சியின் விவிஐபிக்களை சந்திக்க காத்திருப்பு

* ரகசிய இடங்களில் சந்தித்து பேச திட்டம்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வருகிற 24ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் ‘சீட்’ வாங்க அதிமுகவில் கோடிக்கணக்கில் மறைமுக பேரம் நடைபெற்று வருகிறது. இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க பலரும் சென்னையில் காத்துக்கிடக்கிறார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வருகிற 24ம் தேதி முதல் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 15 ஆயிரம் பணம் செலுத்தி விருப்ப மனு பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அதிமுக சார்பில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட அதிமுகவினர் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு அதிமுகவில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் என்று கட்சியின் தலைமையை தொடர்பு கொண்டு இப்போதே பேசி வருகிறார்கள். தங்களுக்கு சீட் தந்தால் பல கோடி ரூபாய் தருவதாகவும் அவர்கள் பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. கட்சி தலைமையை நேரில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், தங்கள் பகுதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகளை சந்தித்து பண பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு முன்பே, தங்களுக்கான சீட் ஒதுக்குவதாக உறுதி அளித்தால் 10 கோடி வரை தருவதாகவும் பலர் உறுதி அளித்துள்ளனர். அதன்படி, கட்சி நிதி மற்றும் தேர்தல் செலவுக்கும் பணம் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இதனால், அதிமுகவில் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என உறுதி செய்யப்படாத நிலையில் அதிமுகவினர் போட்டியிட சீட் பேரம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. இந்த கட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து குறைந்தபட்சம் 60 முதல் 65 இடங்கள் கொடுக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 170 இடங்களில் இருந்து 175 இடங்களில் அதிமுக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 234 தொகுதிக்கும் போட்டியிட அதிமுகவினர் பலரும் விருப்பம் தெரிவித்து கட்சி தலைமையிடம் பேசி வருகிறார்கள். இதற்காக 10 கோடி வரை பணமும் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக கட்சி தலைமை, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், பணத்தை கொடுத்து தங்களுக்கு வேண்டிய தொகுதியை வாங்கி விடலாம் என்று அதிமுகவில் பணம் படைத்தவர்கள் விடா முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக முக்கிய விஐபிக்களை சந்திக்க சென்னையில் காத்துக் கிடக்கிறார்கள்.

குறிப்பாக சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாகவும், தென்மாவட்டங்களில் உள்ளவர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலமாகவும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மூலமாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலரிடம் சீட் கேட்டு பேரம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: