சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்! கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!!

காலையில் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்திலோ, காரிலோ கிளம்புகிறீர்கள். இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறது?

இந்திய பெருநகரங்களில் ‘பீக் அவர்ஸ்’ என்று சொல்லப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் (அலுவலகம்-கல்லூரி-பள்ளிக்கு செல்லும் மற்றும் திரும்ப வரும் நேரம்) சராசரியாக 10 கி.மீ. வேகத்தில்தான் பயணிக்க முடிகிறது என்கிறார்கள். உங்களுடைய பைக் அனாயசமாக 80 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய சக்தி கொண்டது என்றாலும், நீங்கள் உருட்டிக் கொண்டுதான் ஓட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

இந்தியர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது. தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது. மோட்டார் வாகனங்களின் விலை, இன்று கீழ்நடுத்தர மக்களுக்கும் கட்டுப்படியாகும் நிலையில் இருக்கிறது. இந்த காரணங்களால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எல்லாம் சரிதான்.ஆனாலும் -நம் பாட்டன்களும், முப்பாட்டன்களும் மாட்டு வண்டியிலும், குதிரை வண்டியிலும் என்ன வேகத்தில் போனார்களோ, அதே வேகத்தில்தானே நாமும் அன்றாடம் பயணிக்க வேண்டியிருக்கிறது? கூடுதல் எழவாக மோட்டார் வாகனங்கள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்ஸைட், கார்பன் மோனாக்ஸைட் போன்ற நச்சுப்புகைகளும் நமக்கு இலவச இணைப்பு.

மேலைநாடுகள் இதற்கு தீர்வாக சைக்கிளை காண்கிறார்கள். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள் என்பதால், எலெக்ட்ரிக் சைக்கிள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இயல்பிலேயே உழைப்பாளிகளான ஆசியர்கள் மிதித்து ஓட்டும் பாரம்பரியமான சைக்கிள் களையே விரும்புகிறார்கள்.

குறிப்பாக சீனா. இந்நாட்டின் தலைநகரான பீஜிங்கை, ‘சைக்கிள்களின் பேரரசு’ என்று செல்லமாக குறிப்பிடுகிறார்கள். சைக்கிள் வைத்திருப்பதையும், அதை ஓட்டுவதையும் சீனர்கள் கவுரவமாக கருதுகிறார்கள். அந்நாட்டில் தோராயமாக 50 கோடி சைக்கிள்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 40 சதவிகிதம் பேர் சைக்கிள் பயன்படுத்துகிறார்கள். உலகிலேயே மகிழ்ச்சியான நாடு என்று டென்மார்க்கை சொல்வார்கள். அந்நாட்டு மக்கள் குறைந்த தூர பயணத்துக்கு எப்போதும் சைக்கிளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் என்னவோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சுமார் அரை கோடி பேர் வசிக்கும் நாட்டில் தோராயமாக 45 லட்சம் சைக்கிள்கள் இருக்கின்றன என்றால் சும்மாவா? நெதர்லாண்டெல்லாம் இன்னும் அட்டகாசம். 99 சதவிகிதம் பேரிடம் சைக்கிள் இருக்கிறதாம்.

அதாவது அந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சைக்கிள். ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் நாடுகளில் எல்லாம் சைக்கிள்தான் ஹீரோ.நாமோ நாலு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்துக்கு கூட காரை கஷ்டப்பட்டு பார்க்கிங்கில் இருந்து ரிவர்ஸ் எடுத்து, இரண்டு சிக்னலில் நின்று, பார்க்கிங் தேடி வண்டியை உருட்டி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சமயங்களில் மெட்ரோ ரயிலுக்கு தோண்டப்படும் ராட்சதக் குழிகளில் வண்டியை இறக்கி, ஊடகங்களுக்கு மூன்றாம் பக்க செய்தியாகிறோம்.அதிக மக்கள் தொகை கொண்ட சீனாதான் சைக்கிள் மேட்டரில் நம்பர் ஒன். ஐம்பது கோடி சைக்கிள்கள். அம்மாடியோவ். மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடம் நமக்குதான் என்றாலும் உலகிலேயே சைக்கிள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா இல்லை.

என்ன காரணம்?

இது ஏழைகளின் வாகனம் என்று நம்புகிறோம். எனவே சைக்கிள் ஓட்டுவதை கவுரவக் குறைச்சலாக கருதுகிறோம்.நேரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து பைக்கையோ, காரையோ எடுத்து டிராஃபிக்கை ஜாம் ஆக்கி ஆமைநடை போடுகிறோம்.உழைப்புக்கு அஞ்சுகிறோம். சைக்கிளை மிதித்தால் வியர்வை வரும். டயர்ட் ஆகிடுவோம் என்று நம்புகிறோம்.

இந்திய சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது பாதுகாப்பானதல்ல என்று நமக்கு நாமே நொண்டிச்சாக்கு சொல்லிக் கொள்கிறோம்.மோட்டார் பைக் மற்றும் கார் வாங்க ஈஸியாக பைனான்ஸ் கிடைக்கிறது. தேவையோ தேவையில்லையோ ஈ.எம்.ஐ. போட்டு, மாதத்தவணை கட்ட தாவூ தீர்ந்து, பெட்ரோல் போட்டு டவுசர் கழன்று, ஹெல்மெட் (ஜூலை ஒண்ணாம் தேதியிலிருந்து பில்லியனில் உட்காருபவருக்கும் சேர்த்து), வருடாவருடம் இன்சூரன்ஸ் என்று பர்ஸை காலியாக்கிக் கொண்டிருக்கிறோம். புதுசாக வாங்கும்போதுதான் மோட்டார் வாகனங்கள் நம் கண்ட்ரோலில் இருக்கும். அப்புறம் அதன் கட்டுப்பாட்டுக்கு நாம் அடிமைகள்.

தேவையா?

உடல் இளைக்க காலை-மாலை ஓட்டம், ஜிம், டயட் உணவு என்றெல்லாம் ஏன் கஷ்டப்பட வேண்டும். சைக்கிள் ஓட்டினாலேயே அதுவே உடற்பயிற்சியாகி நம்மை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் இல்லையா?

சைக்கிள்களால் sound pollution மற்றும் காற்றுமாசு சுத்தமாக இல்லை என்பதால் மனச்சோர்வு குறையும் என்று சந்தோஷமாக ஆய்வாளர்கள் அறிவிக்கிறார்கள். நம் காதில்தான் விழுந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.நகரங்களின் போக்கு வரத்துச் சிக்கலை வெகுவாக குறைக்கலாம். பார்க்கிங் பிராப்ளம் சுத்தமாக இல்லை. மெயினாக நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை காவு வாங்காது. பராமரிப்புச் செலவு ரொம்ப ரொம்ப குறைவு.தனிமனிதர்கள் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். இதனால், இந்த இரண்டு பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி, இதில் இடவசதி கருதி நாம் குறிப்பிடாமல் விட்டிருக்கும் இரண்டு லட்சம் பக்கங்களுக்கு மிகாத பல சிக்கல்களுக்கும் சைக்கிள் நல்ல தீர்வு. அரசும் சைக்கிளை ஊக்குவிக்க வேண்டும். சைக்கிள் ஓட்டிகளுக்கு சாலையில் தனிப்பாதை அமைத்துத் தருவது போன்ற யோசனைகளை பரிசீலிக்க வேண்டும்.

சமீபகாலமாக தொழில்நுட்பரீதியாக சைக்கிள்களில் எவ்வளவோ வசதிகள் கூடிக்கொண்டே போகிறது. அதையெல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?சைக்கிள் தான் தேசப்பிதா மகாத்மா காந்தி, நமக்கு பரிந்துரைத்த வாகனம் சார்.

Related Stories:

>