தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: பிரேமலதா தடாலடி; கலக்கத்தில் அதிமுக தலைமை

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக கொடி அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று 21வது ஆண்டாகும். சென்னையில் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேமுதிக கொடி நாள் விழாவில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள 118 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.   முன்னதாக, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றினார். பின்னர் அவரது வீட்டில் இருந்து பிரசார வேன் மூலம் கோயம்பேட்டில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு வந்தார். விழாவில், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை பொது செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, விஜய பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 விழாவில், தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசுகையில், ‘‘அனைவருக்கும் என்னுடைய ெகாடி நாள் வாழ்த்துக்கள்’’ என்றார். இதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிகவினர் இனிமேல் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்கலாம். அவர்கள் யார் என்று கட்சி தலைமை அறிவிக்கும். கூட்டணி பற்றி என்னிடம் கேட்பதை விட, யார் இந்த கூட்டணிக்கு தலைமையோ அவர்களிடம் கேட்க வேண்டும். கூட்டணி பிரச்னை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நிச்சயமாக செயற்குழு, பொதுக் குழு கூட்டி விஜயகாந்த் அறிவிப்பார்.  சென்னை வரும் பிரதமர், 3 மணி நேரம் தான் இங்கு இருக்கிறார். என்னென்ன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. ஒருவேளை பிரதமரை வரவேற்பதற்கும், வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்தால் அதுபற்றி பரிசீலித்து, விஜயகாந்த் யாரை அனுப்புகிறார்களோ அவர்கள் செல்வார்கள்.

 தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி இது. எந்த கட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அமைச்சர்கள், பாமகவை சந்திப்பது 20 சதவீத இடஒதுக்கீட்டுக்காக பேசுவதாக சொல்கிறார்கள்.  விஜயகாந்த் நலமுடன் உள்ளார். தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க தமிழகம் முழுவதும் வருவதாக அவரே சொல்லியுள்ளார். தேர்தல் தேதி அறிவித்தவுடன் இறுதி கட்ட பிரசாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். அவர் ஆணையிட்டால், நிச்சயமாக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவேன்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: