தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வசந்தம் கார்த்திகேயன் வெற்றிபெற வேண்டும். திமுக ஆட்சி வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் காரணம் குறித்து விசாரிக்கப்படும். திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் உள்ளதால் அதிகமாக உழைக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் அவலங்களையும், மக்கள் படும் வேதனைகளையும், திமுக ஆட்சியில் செய்த நன்மைகள், சாதனைகளையும், பிரசார கூட்டத்தில் மக்களிடம் கூறி வருகிறேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர் அணி பங்கு முக்கியத்துவமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. நீங்களும் அதனை உறுதியோடு ஏற்று செயல்பட வேண்டும். சோர்வு அடைய கூடாது. கடந்த மக்களவை தேர்தலில் மிக பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். இந்தியாவின் மிக பெரிய மூன்றாவது கட்சியாக திமுக உருவெடுத்ததற்கு நீங்கள்தான் காரணம். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற உறுதி எடுக்க வேண்டும், என்றார்.  

இதை தொடர்ந்து மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை ஆற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பஸ் நிறுத்தம் மற்றும் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறுபோட்டு விற்றுவிடுவார்கள். ரூ. 6 ஆயிரம் கோடியை எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கி அனுமதி அளித்துள்ளனர். இன்னும் இரண்டரை மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும். தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: