தமிழுக்கான தனிச்சிறப்பு அடையாளம் ழகரம்; Tamil Nadu என்பதற்கு பதில் Thamizhl Naadu என மாற்றக்கோரி வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை Tamil Nadu என்பதற்கு பதில் Thamizhl Naadu என மாற்றக்கோரிய வழக்கில் தமிழின் சிறப்பை கருத்தில் கொண்டு 8 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு என்பதனை ஆங்கில வார்த்தையில் சரியான உச்சரிப்பு வரும் வகையில் மாற்றக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; தமிழ் பழமையான தனிச் சிறப்பு கொண்ட மொழி. தமிழ் மொழியின் ஆகச் சிறந்த அடையாளம் சிறப்பு ழகரம்.

தமிழ்நாடு என்பதை தற்போது குறிக்க பயன்படுத்தும் tamilnadu என்ற ஆங்கில சொல் உச்சரிக்கும் போது டமிழ்நாடு என வருகிறது. அதை ஆங்கிலத்தில் THAMIZHL NAADU எனக் குறிப்பிட்டால் தமிழ்நாடு என்ற உச்சரிப்பு சரியாக இருக்கும். தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, பரிபாடல், மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்பட இலக்கியங்களில் சிறப்பு ழகரத்துடன் தமிழ்நாடு என்ற வார்த்தை பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு என்பதற்கான ஆங்கில வார்த்தையான tamilnadu -யை THAMIZHL NAADU என மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. ஆங்கிலேயருக்கும், வடமாநிலத்தவருக்கும் சிறப்பு ழகர உச்சரிப்பு வராது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழின் சிறப்பான ழகரத்தை அனைவரும் அறியவே ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்புக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள்; வழக்கு குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது; ஆனால் தமிழின் சிறப்பை கருத்தில் கொண்டு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: