மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு: துப்புரவு பணியாளர்களுக்கும் பிப்ரவரி முதல் வாரம் தடுப்பூசி

புதுடெல்லி: சுகாதாரப் பணியாளர்களைத் தொடர்ந்து, பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவர்கள், நர்சுகள், இதர சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 29 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட இதர முன்களப் பணியாளர்களுக்கு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசி போடும் பணியை தொடங்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்களப் பணியாளர்களின் பெயர் பட்டியலை புதுப்பித்து தயார்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: