நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன .பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ அல்லது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, கருணை மதிப்பெண்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இருப்பினும் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்த வேண்டும். அதே போன்று நீட் தேர்வு முறைகேடுகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்குக்கும் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ”நீட் தேர்வு காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் மறுதேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதால், கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”நீட் தேர்வு கலந்தாய்வுக்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது.

கால தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மறுதேர்வுக்கு அனுமதிப்பது குறித்து தேசிய தேர்வுகள் முகமை மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. ஏனெனில் அதுகுறித்து அவர்கள் தான் முடிவெடுக்க முடியும். மேலும் நீட் தேர்வு மற்றும் அதன் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை தாக்கல் செய்திருந்த மனுவுக்கு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: