திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரமான அன்னப்பிரசாதம்: அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி உத்தரவிட்டார். திருமலையில் கோகுலம் ஓய்வறையில் உள்ள கூட்ட அரங்கில், செயல் அதிகாரி ஷியாமலாராவ், இணை செயல் அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மன் ஆகியோர் அன்னபிரசாத துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

இதில் அன்னப்பிரசாதம் தயாரிக்கப்படும் மாத்ருஸ்ரீதரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம் (எம்டிவிஏசி), வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அட்சிய சமையலறை, பிஏசி 2, பணியாளர்கள் கேன்டீன் மற்றும் பத்மாவதி விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாஞ்சஜன்யம் சமையல் கூடத்தை விரைவில் துவங்க வேண்டும் என்று அன்னபிரசாதம், பொறியியல் துறை அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி உத்தரவிட்டார்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 1.92 லட்சம் பேருக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. திருமலையில் மட்டும் சுமார் 1.75 லட்சம் பேரும், திருப்பதியில் 17 ஆயிரம் பேரும், திருமலையில் வார இறுதி நாட்களில் 1.95 லட்சம் பேரும், திருப்பதியில் 19 ஆயிரம் பேரும் மொத்தம் சுமார் 2.14 லட்சம் பேர் அன்னபிரசாதம் பெறுகின்றனர். இதற்காக சராசரியாக ஒரு நாளைக்கு அன்னப்பிரசாத திட்டத்திற்கு ₹38 லட்சம் செலவு செய்யப்படுகிறது. காய்கறி நன்கொடையாளர்கள் வழங்குவதும், ஒரு நாள் அன்னப்பிரசாதம் வழங்கும் நன்கொடை திட்டம் போன்றவை நடைமுறையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவைக்கு ஏற்ப பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படும் பழமையான இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான செயல்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஷியாமலாராவ் உத்தரவிட்டார். அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்த உணவு ஆலோசகரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

The post திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரமான அன்னப்பிரசாதம்: அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: