விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது: காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ்குண்டுராவ் குற்றச்சாட்டு

பெங்களூரு: விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கத்தினர் கடந்த 60 நாட்களாக தொடர் ேபாராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து மாநில விவசாய சங்கத்தினர் பெங்களூருவில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர். ஆனால் மாநில போலீசார் இதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

 டெல்லி போலீசாரே அனுமதி வழங்கியுள்ளனர். அப்படியிருக்கும் போது மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதே போல் விவசாயிகளின் டிராக்டர்களை மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் முயற்சித்துள்ளனர். அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்கிருக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் போலீசாரின் இது போன்ற நடவடிக்கையால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசே பொறுப்பு

மேலவை எதிர் கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் கூறியதாவது: விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பெங்களூருவில் மாநில விவசாய சங்கத்தினர் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படியில்லை என்றால் வரும் நாட்களில் நடைபெறும் சம்பவங்களுக்கு மத்திய அரசே நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.

Related Stories:

>