21.5.2026 முதல் 27.5.2026 வரை
சாதகங்கள்: ராசிநாதன், வார மத்தியில், மிகப்பெரிய பலம் பெறுகிறார். கடகத்தில், பஞ்சம திரிகோணத்தில் உச்சம் பெறுகிறார். அதோடு ராசியையும் பார்க்கிறார். இதுவரை இருந்த சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக மாறும். சனிபகவான் ராசியில் இருந்தாலும்கூட, குருவின் விசேஷமான பார்வை அவருடைய சொந்த ராசியில் அமர்ந்த சனிக்கு வருவதால், சனி தோஷங்கள் பெருமளவு கட்டுப்படும். 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் அரசாங்க காரியங்களில் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதுவரை இல்லாத மன நிம்மதி மற்றும் தெளிவு கிடைக்கும். ஆறில் உள்ள கேது உங்களை பிரச்னைகளிலிருந்து காப்பாற்றி புதிய சிந்தனைத் தெளிவைத் தருவார்.
கவனம் தேவை: விரயத்தில் ராகு, ராசியில் சனி, வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், நான்காம் இடத்தில் அஷ்டமாதிபதி சுக்கிரன் எனப் பல கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், எல்லா விஷயங்களிலும் பொறுமையும் கவனமும் தேவை. அலட்சியம் கூடாது. சுக ஸ்தானம் கெட்டிருப்பதால் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உருவாகலாம். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் சரி வர நடைபெறாததால், மனக்கசப்பும் சச்சரவும் உண்டாகலாம்.
பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். தினம் ஒரு தரம் குல தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.
