(4.7.2026 முதல் 10.7.2026 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஏழிலிருந்து ராசியைப் பார்ப்பதால் ராசிக்கு பலம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் செய்து பார்க்கலாம் என்ற உற்சாகம் பிறக்கும். ஒன்பதாம் இடத்தில் உள்ள குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சரியான வழியில் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. தடங்கல்களை குரு பகவான் நீக்குவார். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் உயர் கல்விக்கு நல்ல வழி பிறக்கும். பாக்கியஸ்தானமும் பஞ்சம ஸ்தானமும் பலம் பெற்று இருப்பதால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. சிலர் சொந்தக் கட்டிடத்திற்கு தொழிலை மாற்றும் ஏற்றமும் உண்டு.
கவனம் தேவை: சுபச் செலவுகள் அதிகரிக்கும். அஷ்டம ராசியில் சூரிய சஞ்சாரம் இருப்பதால் வயிற்று உபாதைகள் ஏற்படலாம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் சற்று அதிகரிக்கலாம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. நான்காம் இடத்தில் ராகு இருப்பதால் அவ்வப்பொழுது சுகம் கெடும். சோர்வு ஏற்படும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.
பரிகாரம்: சூரியனும் புதனும் அஷ்டம ராசியில் இருப்பதால் சூரிய நாராயண ரையும் பெருமாளையும் வணங்குங்கள்.
